எங்களை மிரட்டுவதை நிறுத்துங்கள்... மீன்பிடி உரிமம் வழங்கும் விடயத்தில் எந்த மாற்றமும் இல்லை: பிரித்தானியா உறுதி
பிரெஞ்சு மீன்பிடி படகுகளுக்கு உரிமம் வழங்குவது குறித்த விடயத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதியாக தெரிவித்துவிட்டார்.
பிரெக்சிட் வர்த்தக ஒப்பந்தத்தின்படி, இதற்கு முன் பிரித்தானிய கடல் பகுதியில் மீன் பிடித்ததாக நிரூபிக்கும் பிரெஞ்சுப் படகுகளுக்கு மட்டும், 2026ஆம் ஆண்டு வரை பிரித்தானிய கடல் பகுதியில் ஆறு முதல் 12 மைல் தொலைவுக்கு மீன் பிடிக்க அனுமதி வழங்கக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஆனால், சில பிரெஞ்சுப் படகுகளால் அதை ஆவணங்கள் மூலம் நிரூபிக்க முடியவில்லை. ஆகவே, அப்படிப்பட்ட படகுகள் பிரித்தானிய கடல் பகுதியில் மீன் பிடிக்க உரிமம் கோரி விண்ணப்பித்தபோது, அந்த படகுகளுக்கு பிரித்தானியா உரிமம் வழங்க மறுத்துவிட்டது.
ஆனால், பிரெக்சிட் ஒப்பந்தத்தை பிரித்தானியா மீறிவிட்டதாகக் கூறி, தங்கள் படகுகளை பிரித்தானிய கடல் பகுதியில் மீன் பிடிக்க அனுமதிக்காவிட்டால், பிரித்தானியாவை பழிவாங்குவோம், பிரித்தானிய மீனவர்கள் பிடித்த மீன்களை பிரான்ஸ் துறைமுகங்களில் இறக்கவிடமாட்டோம், பிரித்தானிய லொறிகளுக்கு புதிதாக சோதனைகளை உருவாக்குவோம் என்றெல்லாம் பிரான்ஸ் தரப்பு மிரட்டல் விடுத்துக்கொண்டே இருந்தது.
இந்நிலையில், இன்று பாரீஸ் செல்லும் பிரித்தானிய தரப்பு பிரெக்சிட் அமைச்சரான Lord Frost, பிரெஞ்சு தரப்பு ஐரோப்பிய அமைச்சரான Clement Beauneஐ சந்தித்து, இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
அவர், பிரித்தானியாவை மிரட்டுவதை மொத்தமாக நிறுத்திக்கொள்ளுங்கள் என்று பிரான்சுக்குத் தெரிவிக்க இருக்கிறார்.
ஆனால், பிரெஞ்சு மீன்பிடி படகுகளுக்கு உரிமம் வழங்குவது குறித்த விடயத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பதை அவர் பிரான்ஸ் தரப்புக்கு தெளிவுபடுத்த இருப்பதால், பேச்சுவார்த்தையால் பிரச்சினை பெரிதாகலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
அதற்கேற்றாற்போல், பிரான்ஸ் அரசின் செய்தித்தொடர்பாளரான Gabriel Attalம், பிரித்தானிய தரப்பு பிரெக்சிட் அமைச்சரான Lord Frost சலுகைகள் வழங்காவிட்டால், மீண்டும் பிரித்தானியா மீது தடைகள் விதிக்கவேண்டி வரும் என எச்சரித்துள்ளதால், இன்றைய பேச்சு வார்த்தையின் முடிவு என்னவாகும் என தெரியவில்லை.