எடை குறைக்கும் கொள்ளு! எப்படி எடுத்து கொள்ளலாம் தெரியுமா?
ஆரோக்கியமான முறையில் எடை குறைய வரும்புவர்களுக்கு கொள்ளு சிறந்த உணவாக கருதப்படுகின்றது.
கொள்ளு ஊட்டச்சத்து நிறைந்தது என்பதால் எடை இழப்பிலும் உடலை வலுவாக வைத்திருக்கும் அளவுக்கு சிறந்த ஊட்டச்சத்து இதில் அடங்கியுள்ளது.
அந்தவகையில் உடல் எடையை குறைக்க கொள்ளை எப்படி எடுத்து கொள்ளலாம் என இங்கே பார்ப்போம்.
கொள்ளு நீர்
கொள்ளுவை 8 மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் கொள்ளுவை சேர்த்து நான்கு மடங்கு அளவு தண்ணீர் விட்டு 6 முத 8 விசில் வரை விடவும். பிறகு இந்த நீரை மட்டும் மேலாக எடுத்து உப்பு சேர்த்து குடிக்கவும்.
வெதுவெதுப்பான சூட்டில் குடிக்கவும். தினமும் ஒரு கப் குடித்தால் போதுமானது. இந்த கொள்ளு பயறை வெங்காயம், பச்சைமிளகாய் கீறி போட்டு, தாளித்து சுண்டலாக்கி சாப்பிடலாம்.
கொள்ளு பொடி
வெறும் வாணலியில் கல் நீக்கி சுத்தம் செய்த கொள்ளுப்பருப்பை சேர்த்து அதன் நிறம் மாறும் வரை வறுக்கவும். பிறகு அதை தட்டில் கொட்டி ஆறவிடவும். மீண்டும் வாணலில் காரத்துக்கேற்ப வர மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
இவை ஆறியதும் மிக்ஸியி போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து பொடிக்கவும். கரகரப்பாக பொடித்து எடுக்கவும். இந்த பொடியை இட்லி, தோசைக்கு நல்லெண்ணெய் சேர்த்து தொட்டு கொள்ளலாம். அதே போன்று உதிரான சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் மற்றும் இந்த பொடியை சேர்த்து உருட்டி சாப்பிடலாம்.
கொள்ளு சுண்டல்
கொள்ளு நீரை குடித்த பிறகு கொள்ளுவை நீரில்லாமல் வடிகட்டவும்.கொள்ளு அளவுக்கேற்ப வெங்காயம் எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பச்சைமிளகாய் நீள் வாக்கில் கீறி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்க்கவும்.
பிறகு கொள்ளு சேர்த்து இலேசாக உப்பு தூவி இறக்கவும். தேவையெனில் தேங்காய்த்துருவல் சேர்க்கவும். பரிமாறுவதற்கு முன்பு கொத்துமல்லித்தழை சேர்த்து விடவும்.
கொள்ளு சூப்
சளி மற்றும் காய்ச்சல் காலங்களுக்கும் இவை நன்மை தரும். கொள்ளுவை வேகவைத்து தண்ணீரை தனியாக எடுக்கவும்.
இந்த தண்ணீரில் பொடித்த மிளகாய், புளிவிழுது, உப்பு சேர்க்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி தயாரித்து வைத்த கொள்ளுநீர் புளிகரைசலை சேர்க்கவும். இதை சிறுந்தீயில் வைத்து நுரை வரும் போது இறக்கி விடவும்.
இதை வெறுமனே பருகலாம். அல்லது சாதத்தை குழைத்து தளர ஊற்றியும் சாப்பிடலாம்.
கொள்ளு துவையல்
கொள்ளுவை வறுத்து வேகவைத்து தண்ணியில்லாமல் வடிகட்டவும். ஒரு கப் கொள்ளுவுக்கு அரை கப் உ.பருப்பு சேர்த்து வாணலியில் வதக்கவும். பிறகு புளி, காரத்துக்கேற்ப மிளகாய், பூண்டு 10 பல், உப்பு தேவைக்கு சேர்த்து நன்றாக வறுக்கவும். தட்டில் பரத்தி கொட்டிவிடவும்.
இதனுடன் கொள்ளுவை சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். துவையல் தயார். இதையும் சாதத்தில் சேர்ந்து பிசைந்து சாப்பிடலாம்.