அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி... டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு
நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தால், இனி ஒருமுறை தேர்தலில் களம் காணும் எண்ணம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெற்றிவாய்ப்பை இழந்தால்
அமெரிக்காவில் கடந்த மூன்று ஜனாதிபதி தேர்தல்களில் குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்டு ட்ரம்ப் களமிறங்கினார். மட்டுமின்றி, கடந்த எட்டு ஆண்டுகளில் கட்சியை பெரிய அளவில் மாற்றி அமைத்துள்ளார்.
இந்த நிலையில், நேர்முகம் ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள டொனால்டு ட்ரம்ப், நவம்பர் தேர்தலில் தாம் வெற்றிவாய்ப்பை இழந்தால், இனி ஒருமுறை தேர்தலில் களம் காணும் எண்ணம் இல்லை என்றார்.
ஆனால், இந்த முறை குடியரசுக் கட்சி மிகப்பெரிய வெற்றியை ஈட்டும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க தேர்தல் விதிகளின் அடிப்படையில் ஒருவர் இருமுறை மட்டுமே ஜனாதிபதி பொறுப்பில் இருக்க முடியும்.
அதனால், தற்போது ட்ரம்ப் வெற்றி பெறுவார் என்றால், 2028 ஜனாதிபதி தேர்தலில் அவர் களம் காணும் வாய்ப்பில்லை. கடந்த காலங்களில், தேர்தல் தோல்வி தொடர்பில் டொனால்டு ட்ரம்ப் ஒருபோதும் வெளிப்படையாக விவாதித்ததில்லை.
பெரும்பாலும் தமது ஆதரவாளர்களை ஊக்கமூட்டும் பேச்சுக்களாலும் சமூக ஊடக பதிவுகளாலும், வெற்றி நமதே என முழங்கி வருபவர் டொனால்டு ட்ரம்ப். ஆனால் கடந்த நான்கு நாட்களில் இரண்டாவது முறையாக அவர் தோல்விக்கான வாய்ப்பைக் குறிப்பிட்டுள்ளார்.
வியாழக்கிழமை இஸ்ரேல்-அமெரிக்க கவுன்சில் நடத்திய நிகழ்வின் போது பேசிய டொனால்டு ட்ரம்ப், தாம் வெற்றிவாய்ப்பை இழக்க நேர்ந்தால் அதில் யூத வாக்காளர்களின் பங்கும் இருக்கும் என்றார்.
வெற்றிவாய்ப்பு குறித்து சந்தேகம்
இந்த தேர்தலில் தாம் வெற்றிபெறாவிட்டால் என்ன நடக்கும் என்று அவர்களுக்குத் தெரியுமா? என்றும் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். தனக்கு எதிராக 60 சதவிகித யூத மக்கள் வாக்களிக்க இருப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ட்ரம்பின் குற்றச்சாட்டுக்கு ஹாரிஸ் பரப்புரை நிர்வாகமும் யூத அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் களமிறங்கியதன் பின்னரே, டொனால்டு ட்ரம்ப் தமது வெற்றிவாய்ப்பு குறித்து சந்தேகப்படுவதாக கூறப்படுகிறது.
ஆகஸ்டு மாதத்தில் மட்டும் தேர்தல் நிதியாக 190 மில்லியன் டொலர்களை கமலா ஹாரிஸ் திரட்டிய நிலையில், 130 மில்லியன் டொலர் மட்டுமே ட்ரம்ப் மற்றும் அவரது அமைப்புகளால் திரட்ட முடிந்தது.
மேலும், ஞாயிறன்று வெளியான கருத்துக்கணிப்பில் தேசிய அளவில் 52 சதவிகித வெற்றிவாய்ப்புடன் கமலா ஹாரிஸும் 48 சதவிகித வெற்றிவாய்ப்புடன் ட்ரம்பும் உள்ளனர்.
அத்துடன், போட்டி மிகுந்த மாகாணங்களில் 51 சதவிகித வெற்றிவாய்ப்புடன் கமலா ஹாரிஸும், 49 சதவிகித வெற்றிவாய்ப்புடன் ட்ரம்பும் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |