விலையுயர்ந்த ரோலக்ஸ் கைக்கடிகாரம் மாயமான மர்மம்... பிரிக்கப்படாத பார்சல்: தபாலில் அனுப்பப்பட்ட கைக்கடிகாரம் எங்கே?
சுவிஸ் தயாரிப்பான ரோலக்ஸ் கைக்கடிகாரம் ஒன்று மர்மமான முறையில் மாயமானதைத் தொடர்ந்து தபால் துறையின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஒன்லைனில் 8,000 சுவிஸ் ஃப்ராங்குகள் மதிப்புடைய ரோலக்ஸ் கைக்கடிகாரம் ஒன்றை ஏலத்தில் எடுத்தார் Graubünden மாகாணத்தில் வாழும் ஒருவர். அதை ஏலம் எடுத்தவருக்கு தபாலில் அனுப்பியது ஏலம் விட்ட நிறுவனம்.
ஆனால், அதை ஏலம் எடுத்தவர் தபால் மூலம் வந்து சேர்ந்த பார்சலை ஆவலுடன் திறந்து பார்த்தபோது அதில் அந்த கைக்கடிகாரம் இல்லை.
மூன்று அடுக்குகளாக சரியாக பார்சல் செய்யப்பட்டிருந்த நிலையிலும், அதனுள் கைக்கடிகாரம் இல்லாததால் அதிர்ச்சியடைந்தார் அதை ஏலம் எடுத்தவர். அது நேர்த்தியாக பார்சல் செய்யப்பட்டிருப்பதால், வழியில் கைக்கடிகாரம் கீழே விழவும் வாய்ப்பில்லை. Frauenfeld என்ற இடத்திலுள்ள தபால் நிலையத்தில் அந்த பார்சல் எடை போடப்பட்டுள்ளது.
அதே பார்சல் Untervaz என்ற இடத்திலுள்ள தபால் நிலையத்துக்கு வந்து சேர்ந்தபோது மீண்டும் எடையிடப்படும்போது, 120 கிராம் குறைந்துள்ளது. அதாவது சரியாக கைக்கடிகாரத்தின் எடை மட்டும் குறைந்துள்ளது.
ஆகவே, தபால் துறையைச் சேர்ந்த யாரோதான் வழியில் பார்சலைப் பிரித்து கைக்கடிகாரத்தை எடுத்துவிட்டு மீண்டும் பார்சல் செய்து அனுப்பியிருக்கலாம் என்கிறார் அதன் உரிமையாளர். ஆனால், தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள தபால் துறை, தாங்கள் இந்த சம்பவம் குறித்து மாகாண பொலிசாரிடம் புகாரளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஏலம் விட்ட நிறுவனமோ, இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க, மக்கள் கூடுமானவரை நேரில் வந்து பொருட்களை பணம் கொடுத்து வாங்கிக்கொள்வது நல்லது என ஆலோசனை கூறியுள்ளது.
ஆலோசனைகள், புகார்கள் எல்லாம் இருக்கட்டும், ஆனால், 8,000 ஃப்ராங்குகள் கொடுத்து ஏலம் எடுத்தவரின் கைக்கடிகாரம் எங்கே? கைக்கடிகாரம் மட்டுமில்லை, இந்த கேள்விக்கான பதிலும் கிடைக்கவில்லை!