இன்று காலை உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.., எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
வடக்கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளிலும், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும்.

மேலும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடலில் 65km வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று காலை 5.30 மணிக்கு தென்கிழக்கு வங்ககடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
மேலும், இது அக்டோபர் 26ஆம் திகதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுவடையும் என வானிலை மையம் கணித்துள்ளது.
இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தெளிவாகத் தெரியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |