கொரோனா மறுப்பாளரை பணி செய்ய அனுமதிக்க முடியாது: சுவிஸ் நீதிமன்றம் திட்டவட்டம்
சுவிட்சர்லாந்தில் கொரோனா மறுப்பாளரான மருத்துவருக்கு எதிரான நடவடிக்கைகளை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
லூசர்ன் மண்டலம் Ebikon பகுதியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கொரோனா பரவல் தொடர்பில் பொதுமக்களை தவறாக வழி நடத்தி வந்துள்ளார்.
மட்டுமின்றி, மண்டல நிர்வாகம் மேற்கொண்டு வந்த கொரோனா தொடர்பான எச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், மாஸ்க் அணிவதை எதிர்த்து வந்த அவர், தமது சுகாதார மையத்தில் நோயாளிகளை மாஸ்க் அணியாமலையே சந்தித்துள்ளார்.
கொரோனா தொடர்பான எச்சரிக்கை நடவடிக்கைகளால் பொதுமக்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், சமுக இடைவெளியை பேணுவது என்பது தேவையற்றது மட்டுமல்ல, அப்பாவி மக்களை ஏமாற்றும் செயல் எனவும் தெரிவித்திருந்தார்.
மட்டுமின்றி, கொரோனா பரவல் என்பது பயப்படத்தக்க தொற்றல்ல எனவும் பொதுமக்களிடையே பேசி வந்துள்ளார். இந்த நிலையில், மருத்துவருக்கான அவரது ஒப்பந்தத்தை குறிப்பிட்ட சமூகம் ரத்து செய்த நிலையில், பிப்ரவரி 2021 இறுதியில், லூசெர்ன் அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக அந்த மருத்துவரின் உரிமத்தை வாபஸ் பெற்றனர்.
இதனையடுத்து மண்டல நீதிமன்றத்தை நாடிய அந்த மருத்துவர், தமது உரிமத்தை மீட்டுத்தர வேண்டும் என முறையிட்டுள்ளார்.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் லூசெர்ன் மண்டல நிர்வாகம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை நீதிமன்றம் உறுதி செய்துள்ளதுடன், அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளது.
கொரோனா மறுப்பாளரான மருத்துவருக்கு எதிராக நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானது அல்ல.
இந்த விவகாரம் தொடர்பில் அவர் பெடரல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றே கூறப்படுகிறது.