பந்துவீச்சாளர்கள் அபாரம்... கொல்கத்தாவை துவைத்தெடுத்த லக்னோ அணி
15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53வது லீக் ஆட்டத்தில் 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனையடுத்து லக்னோ அணி முதலில் களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக்கும், அணித் தலைவர் கே.எல் ராகுலும் களமிறங்கினர்.
ராகுல் ஒரு பந்து கூட எதிர்கொள்ளாமல் ரன் அவுட் முறையில் வெளியேறினார். எனினும், டி காக் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 29 பந்துகளை எதிர்கொண்டு 50 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா 27 பந்துகளில் 41 ஓட்டங்கள் சேர்த்தார்.
க்ருனால் பாண்ட்யா( 25), படோனி(15), ஸ்டோய்னிஸ்(28), ஹோல்டர்(13) ஓட்டங்களும் எடுத்தனர். இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து 177 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி கொல்கத்தா அணி லக்னோ அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து.
அதிகபட்சமாக ஆன்ட்ரு ரஸ்ஸல் 45 ஓட்டங்கள் அடித்தார். ஆரன் பிஞ்ச்(14), சுனில் நரேன் 22 ஓட்டங்கள் அடித்தனர். அந்த அணியின் மூன்று வீரர்கள் ரன் எதுவும் எடுக்காமலும், பிற வீரர்கள் ஒற்றை இலக்குடன் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இதனையடுத்து கொல்கத்தா அணி 14.3 ஓவர் முடிவில் 101 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. லக்னோ அணி தரப்பில் அதிபட்சமாக அவிஷ்கான் 3 விக்கெட்களும், ஹோல்டர் 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.