தாயாருடன் அலைபேசி அழைப்பு... அடுத்த நொடி வெடித்த துப்பாக்கி: அதிர்ச்சியில் இருந்து மீளாத குடும்பம்
கனடாவின் சர்ரே பகுதியில் இந்திய வம்சாவளி நபர் குடியிருப்பு அருகே துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அவரது மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.
கொலைக்கான காரணம் விசாரணையில்
மாணவர்களுக்கான விசாவில் கடந்த 2019ல் கனடாவுக்கு வந்தவர் யுவராஜ் கோயல். மிக சமீபத்தில் தான் அவர் நிரந்தர வதிவிட உரிமம் பெற்றார். 28 வயதான யுவராஜ் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
யுவராஜ் எந்த குற்றப் பின்னணியும் இல்லாதவர் என்றும், அவர் கொலைக்கான காரணம் விசாரணையில் உள்ளது எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 7ம் திகதி பகல் சுமார் 8.46 மணிக்கு சர்ரே பொலிசாருக்கு துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலை அடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், இரத்தவெள்ளத்தில் கிடந்த யுவராஜை மீட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் தற்போது சந்தேகத்தின் அடிப்படையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயாருடன் அலைபேசியில் தொடர்பு
அதில் மூவர் இந்திய வம்சாவளி கனேடியர்கள் என்றும், ஒருவர் ஒன்ராறியோவில் குடியிருப்பவர் என்றும் கூறப்படுகிறது. சம்பவத்தின் போது யுவராஜ் உடற்பயிற்சி கூடத்தில் இருந்து திரும்பியுள்ளார்.
அவரது காரில் இருந்து வெளியே வந்த அடுத்த நொடி துப்பாக்கியால் சுடப்பட்டதாக அவரது உறவினர் தெரிவித்துள்ளார். என்ன நடந்தது என்பதை தங்களால் நம்ப முடியவில்லை என்றும், ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்றும், குடும்பத்தில் அனைவரும் இதுவரை அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின் போது இந்தியாவில் இருக்கும் தாயாருடன் யுவராஜ் அலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு 30 நொடிகள் அல்லது ஒரு நிமிடம் பேசியிருப்பார் என்றும், அப்போது துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார் என்றும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |