மாமன்னன் படத்திற்கு தடை கோரிய வழக்கு! இன்று நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள மாமன்னன் படத்துக்கு தடைகோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'.
இதில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் உட்பட பலரும் நடித்துள்ளனர், இப்படம் நாளை வெளியாகிறது.
இந்த படத்துக்கு தடை விதிக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், மாமன்னன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் ஏற்கனவே பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை எடுத்துள்ளார்.
அவரது படங்கள் குறிப்பிட்ட சமூகத்தை மையப்படுத்தி இருப்பதுடன், இரு சமூகத்திற்கும் மோதல்களை தூண்டும் விதமாக இருக்கிறது.
மாமன்னன் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமூகத்திற்கு இடையேயான பிரச்சனையை காட்டுவதாகவே இருந்தது.
தென்காசி மாவட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காத்தப்ப புலிதேவன் என்பவரை மாமன்னன் என அழைப்பார்கள்.
அவரை தவறாக சித்தரிக்கும் விதத்திலும் படம் அமைந்துள்ளது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இப்படத்தில் நடித்துள்ளார், இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 173 (ஏ) க்கு எதிராக உள்ளது.
எனவே படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க இன்று முறையீடு செய்யப்பட்ட நிலையில், நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியாகவுரி ஆகியோர் மறுத்து விசாரணையை ஒத்தி வைத்தனர்.
மேலும், திரைப்படத்துக்கு தணிக்கை துறை அனுமதி வழங்கிய பின்னரும் நீதிமன்றம் தலையிட முடியாது.
திரைப்படம் என்பது மக்கள் பார்ப்பதற்கே, சட்ட ஒழுங்கு பிரச்சனை வந்தால் காவல்துறை பார்த்துக் கொள்ளும், பேச்சு உரிமை, கருத்து உரிமை அனைவருக்குமே உண்டு என தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |