ரூ 372 கோடியை நன்கொடையாக அளித்த அமேசான் நிறுவனரின் முன்னாள் மனைவி
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவி மெக்கென்சி ஸ்காட் இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு 42 மில்லியன் டொலர் நன்கொடை அளித்துள்ளார்.
மிகப்பெரிய நன்கொடை
அந்த நிறுவனத்தின் 45 வருட வரலாற்றில், இது மிகப்பெரிய நன்கொடை என்றே கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் சுமார் ரூ372 கோடி தொகையாகும். ஸ்காட் பெரும்பாலும் முதல் தலைமுறை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மாணவர்களுக்கு உதவும் பொருட்டு நன்கொடைகள் அளிப்பதில் நற்பெயரைக் கொண்டுள்ளார்.
Yield Giving என்ற தொண்டு நிறுவனம் ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார். அமெரிக்காவின் பூர்வகுடி மாணவர்களுக்கு மிகப்பெரிய உதவித்தொகை வழங்கும் நேட்டிவ் ஃபார்வர்டுக்கு அவரது சமீபத்திய பங்களிப்புகளில் கோடிக்கணக்கான நன்கொடைகளும் அடங்கும்.
அக்டோபர் 11ல் வெளியான தரவுகளின் அடிப்படையில் ஸ்காட்டின் தற்போதைய சொத்து மதிப்பு என்பது 32.5 பில்லியன் அமெரிக்க டொலராகும். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உடன் 25 வருட குடும்ப வாழ்க்கையை அடுத்து 2019ல் விவாகரத்து பெற்றார்.
4 சதவீத பங்குகள்
இதனையடுத்து, அமேசான் நிறுவனத்தின் 4 சதவீத பங்குகள் அவருக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தமது சொத்தில் குறைந்தது சரி பாதி தொகையை, தமது வாழ்நாளில் நன்கொடையாக அளிக்க இருப்பதாக 2019 மே மாதம் அறிவித்தார்.
2021 ஆம் ஆண்டில், ஸ்காட் உயர்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியரான டான் ஜூவெட்டை மணந்தார். ஆனால் அவர்கள் செப்டம்பர் 2022 இல் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |