பிரான்சில் 48 மணி நேரத்திற்குள் புதிய பிரதமர்: மக்ரோனுக்கு அதிகரிக்கும் நெருக்கடி
பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய பிரதமரை அறிவிப்பார் என பதவி விலகிய பிரதமர் செபாஸ்டின் லெகோர்னு அறிவித்துள்ளார்.
பதவி விலகிய செபாஸ்டின் லெகோர்னு
பிரான்சில் பிரதமராக பதவியேற்று வெறும் 26 நாட்களே ஆகும் நிலையில் பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு ( Sebastien Lecornu) தனது பதவியிலிருந்து திடீரென விலகியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 9ம் திகதி ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனால் பிரதமராக செபாஸ்டியன் நியமிக்கப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை அவரது அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்த செபாஸ்டியன் திடீரென திங்கட்கிழமை பதவியில் இருந்து விலகி இருப்பது பிரான்ஸ் அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் பிரான்சில் இரண்டு ஆண்டுகளில் ஐந்தாவது பிரதமராக நியமிக்கப்பட்டவர் செபாஸ்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.
48 மணி நேரத்தில் புதிய பிரதமர்
இந்நிலையில் ராஜினாமாவுக்கு பிறகு பொதுவெளியில் பேசிய செபாஸ்டியன், அடுத்த 48 மணி நேரத்தில் ஜனாதிபதி மக்ரோன் புதிய பிரதமரை அறிவிப்பார் என தெரிவித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் புதிய தேர்தலுக்கு வாய்ப்புகள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸில் அதிகரித்து வரும் பொதுக்கடன் மற்றும் தேசிய பற்றாக்குறை ஆகியவை தொடர்பான வரவு செலவு திட்டத்திற்கான ஒப்புதலை நாடாளுமன்றத்தில் பெறத் தவறியதை அடுத்து இந்த ராஜினாமாவை செபாஸ்டியன் அறிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
பிரான்ஸில் உச்சம் தொட்டுள்ள இந்த அரசியல் குழப்பத்திற்கு மத்தியில் ஜனாதிபதி மக்ரோன் பதவி விலக வேண்டும் என்று வலது மற்றும் இடதுசாரி அரசியல் தலைவர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |