ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்யவேண்டும்: மேக்ரான் கோரிக்கை
மியான்மர் தலைவரான ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்யவேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேக்ரான் விடுத்துள்ள கோரிக்கை
ராணுவ காவலில் இருக்கும் மியான்மர் தலைவரான ஆங் சான் சூகியின் உடல் நலம் மோசமடைந்துவருவது தெரியவந்ததைத் தொடர்ந்து உடனடியாக அவரை விடுதலை செய்யவேண்டும் என மேக்ரான் கோரிக்கை வைத்துள்ளார்.

80 வயதாகும் ஆங் சான் சூகிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள மேக்ரான், சூகியின் உடல் நலம் மோசமடைந்துவருவது குறித்து அவரது மகன் மூலம் அறிந்துகொண்டதாகவும், அதனால் தான் கவலையடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நியாயமற்ற முறையில் காவலில் அடைக்கப்பட்டுள்ள சூகிக்கு முறையான சிகிச்சை கிடைப்பதிலும் பிரச்சினைகள் உள்ளது குறித்தும் தான் அறிந்துகொண்டதாகவும் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

ஆகவே, 2021 பிப்ரவரி 1ஆம் திகதி முதல் காவலில் அடைக்கப்பட்டுள்ள சூகி உட்பட அனைவரையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்யுமாறு தாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்துவருவதாகவும் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
சூகி, மியான்மர் தலைநகரான Naypyidawஇல் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் நிலையில், அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள மேக்ரான் மற்றும் பிரெஞ்சு தூதருக்கு சூகியின் மகனான கிம் ஆரிஸ் (Kim Aris) நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |