தாலிபான்களை கட்டுக்குள் வைத்திருக்க ஒரு திட்டம்... பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா எடுக்கவிருக்கும் முக்கிய நடவடிக்கை
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் இன்று ஆப்கானிஸ்தான் தொடர்பில் முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுக்க முடிவு செய்துள்ளன.
அமெரிக்கா, எடுத்தோம் கவிழ்த்தோம் என தனது படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து வாபஸ் பெற முடிவு செய்தாலும், பிரித்தானியா, பிரான்ஸ் உட்பட பல நாடுகளுக்கு அந்த முடிவில் ஒப்புதல் இல்லை.
அமெரிக்கா தன் படைகளை வாபஸ் வாங்கத் துவங்கியதே, தாலிபான்கள் தைரியமாக ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்க முக்கிய காரணமாகவும், வாய்ப்பாகவும் அமைந்தது.
ஆனால், இதை அப்படியே விட்டுவிட முடியாது என்ற கருத்தைக் கொண்ட பிரான்சும் பிரித்தானியாவும், இன்று, (30.8.2021) திங்கட்கிழமை, ஐக்கிய நாடுகள் சபையுடன் சந்திப்பு ஒன்றிற்கு திட்டமிட்டுள்ளன.
அந்த சந்திப்பின்போது, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், தொடர்ந்து மனிதநேய நடவடிக்கைகளைத் மேற்கொள்ள உதவும் வகையில், பாதுகாப்பு மண்டலம் ஒன்றை உருவாக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை பிரான்சும் பிரித்தானியாவும் வலியுறுத்த இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
இது மிகவும் அவசியமானது என்று கூறியுள்ள மேக்ரான், ஏதாவது பிரச்சினை ஏற்படும் நிலையில், உடனடியாக செயல்பட ஐக்கிய நாடுகள் சபைக்கு இது ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் என்றார்.
எல்லாவற்றிற்கும் மேல், இந்த பாதுகாப்பு மண்டலம், தாலிபான்கள் மீது தொடர்ந்து ஒரு அழுத்தத்தைக் கொடுக்க சர்வதேச சமுதாயத்துக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் கூறியுள்ளார் அவர்.
ஆப்கானிஸ்தான் நிலவரங்கள் குறித்து விவாதிக்க, ஐக்கிய நாடுகள் கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரித்தானியா, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இன்று சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.