வலுவான நடவடிக்கை வேண்டும்... ரஷ்யாவுக்கு எதிராக கொந்தளித்த மேக்ரான்
ரஷ்யா தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தையை மறுத்தால் வலுவான நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அழைப்பு விடுத்துள்ளார்.
போர் நிறுத்தம் தேவை
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரில், ரஷ்யா முன்னெடுத்த மிருகத்தனமான தாக்குதலில் 9 சிறார்கள் உட்பட 19 பேர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை அடுத்தே, ஜனாதிபதி மேக்ரான் கடுமையான நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைனில் அமைதியைப் பாதுகாக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து முயற்சிகள் முன்னெடுத்து வந்தபோதிலும், ரஷ்யா தொடர்ந்து சிறார்கள் மற்றும் பொதுமக்களைக் கொன்று வருகிறது என்று மேக்ரான் கொந்தளித்துள்ளார்.
ரஷ்யாவின் மிருகத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட சிறார்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களுக்கு தமது இரங்கலைப் பதிவு செய்வதாக பிரஞ்சு மற்றும் உக்ரேனிய மொழிகளில் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கூடிய விரைவில் போர் நிறுத்தம் தேவை என குறிப்பிட்டுள்ள மேக்ரான், ரஷ்யா தொடர்ந்து நேரத்தை வீணடித்து, உக்ரைனுக்கு அமைதியை மறுக்கும் முயற்சியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.
உக்ரைனில் அமைதி
வெள்ளிக்கிழமை உக்ரைனின் Kryvyi Rig பகுதியில் ரஷ்யா முன்னெடுத்த கொடூர தாக்குதலில் 9 சிறார்கள் உட்பட 19 பேர்கள் கொல்லப்பட்டனர். சிறார்களின் விளையாட்டுத் திடல் அருகே ஒரு குடியிருப்பு பகுதியிலேயே ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முழுமையான போர்நிறுத்தத்திற்கான முன்மொழிவை உக்ரைன் ஏற்றுக்கொண்டபோதும், ரஷ்யா, அப்பவி பொதுமக்களைப் பொருட்படுத்தாமல், உக்கிரமாக, மிருகத்தனத்துடன் போரைத் தொடர்கிறது என மேக்ரான் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட பாடுபடுகின்றன என்றும் மேக்ரான் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |