நிக்கோலஸ் சார்க்கோஸிக்கு சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதிக்கு கொலை மிரட்டல்: மேக்ரான் கடும் கண்டனம்
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலஸ் சார்க்கோஸிக்கு சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதற்கு, பிரான்ஸ் இந்நாள் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு ஐந்து ஆண்டுகள் சிறை
2007ஆம் ஆண்டு முதல், 2012ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் நிக்கோலஸ் சார்க்கோஸி.
2007ஆம் ஆண்டு, சார்க்கோஸி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தேர்தல் பிரச்சார செலவுகளுக்காக லிபியா நாட்டின் சர்வாதிகாரியான முஅம்மர் அல் கடாஃபி, சார்க்கோஸிக்கு பல மில்லியன் யூரோக்கள் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்துவந்தது.
இந்த வழக்கில் சார்க்கோஸிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 100,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 3
நீதிபதிக்கு கொலை மிரட்டல்
இந்நிலையில், சார்கோஸி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதியான Nathalie Gavarinoக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சார்க்கோஸிக்கு சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதற்கு, பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகமான எக்ஸில் மேக்ரான் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், நீதிபதிகள் மீது தாக்குதல்கள், கொலை மிரட்டல்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று கூறியுள்ளார்.
சட்டத்தின் விதியே நமது ஜனநாயகத்தில் அஸ்திபாரமாகும் என்று குறிப்பிட்டுள்ள மேக்ரான், நமது நீதித்துறையின் சுதந்திரம், அதன் பாரபட்சமற்ற தன்மை மற்றும் அவற்றை நிலைநிறுத்தும் நீதிபதிகளின் பாதுகாப்பு ஆகியவையே ஜனநாயகத்தின் இன்றியமையாத தூண்கள் என்றும் கூறியுள்ளார்.
L’État de droit est le socle de notre démocratie.
— Emmanuel Macron (@EmmanuelMacron) September 28, 2025
L’indépendance de l’autorité judiciaire, son impartialité comme la protection des magistrats qui la rendent, en sont les piliers essentiels.
Les décisions de justice peuvent être commentées ou critiquées…
நீதிமன்றங்களின் முடிவுகள் விமர்சிக்கப்படலாம், ஆனால், அவை எப்போதுமே பரஸ்பர மரியாதையுடன் தான் இருக்கவேண்டும் என்று கூறியுள்ள மேக்ரான், கொலைமிரட்டல் விடுத்தவர்கள் அடையாளம் காணப்பட்டதும், சம்பந்தப்பட்டவர்களுக்கு தக்க தண்டனை அளிக்கவேண்டும் என தான் நீதித்துறை மற்றும் உள்துறை அமைச்சர்களை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, சார்க்கோஸிக்கு தண்டனை விதிக்கப்பட்டதால் அவருக்கு வழங்கப்பட்ட Legion of Honour என்னும் பிரான்சின் உயரிய கௌரவத்தை, விருதை பறிக்கவேண்டும் என்ற பேச்சு எழுந்தபோது, தான் சார்க்கோஸி மீது மரியாதை வைத்திருப்பதாகவும், அப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்படுமானால் தான் அதை எதிர்க்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் மேக்ரான்.
முன்னாள் ஜனாதிபதிகளை மதிப்பது மிகவும் அவசியம் என நான் கருதுகிறேன் என்று கூறிய மேக்ரான், சார்க்கோஸிக்கு வழங்கப்பட்ட கௌரவத்தை பறிப்பது நல்ல முடிவாக இருக்காது என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |