மேக்ரான் நண்பரா எதிரியா? சர்ச்சையை உருவாக்கிய கேள்விக்கு பதிலளித்தார் லிஸ் ட்ரஸ்
பிரித்தானியாவில் புதிய பிரதமருக்கான போட்டி பரபரப்பாக நடந்துகொண்டிருந்த நேரத்தில், மேக்ரான் நண்பரா எதிரியா என்பது இன்னமும் முடிவாகவில்லை என்று கூறியிருந்தார் லிஸ் ட்ரஸ்.
தற்போது, மேக்ரான் நண்பர்தான் என கூறியுள்ளார் லிஸ் ட்ரஸ்!
பிரித்தானியாவில் புதிய பிரதமருக்கான போட்டி பரபரப்பாக நடந்துகொண்டிருந்த நேரத்தில், பிரதமர் வேட்பாளர்களில் ஒருவரான லிஸ் ட்ரஸ்ஸிடம், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நண்பரா எதிரியா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
பிரெக்சிட் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் அடிக்கடி உரசல்கள் நடந்துகொண்டே இருந்த நிலையில், சட்டென, மேக்ரான் நண்பரா எதிரியா என்பது இன்னமும் முடிவாகவில்லை என்று கூறிவிட்டார் லிஸ் ட்ரஸ்.
அவரது பதில் பிரான்ஸ் தரப்பில் பெரும் எரிச்சலையூட்டியது. இந்தப் பெண் லிஸ் ட்ரஸ் தன்னை யார் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாள், இப்படி பேசியதற்கு அவள் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றே பிரான்ஸ் தரப்பில் ஒருவர் கடுமையாக விமர்சிக்கும் அளவுக்கு அந்த விடயம் சர்ச்சையை உருவாக்கியது.
பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்ட விரோத புலம்பெயர்ந்தோரைக் கட்டுப்படுத்தவேண்டுமானால், நிச்சயம் அதற்கு பிரான்சின் ஆதரவு தேவை. ஆனால், அதைக்குறித்தெல்லாம் யோசிக்காமல் சட்டென பதில் சொல்லிவிட்டார் லிஸ் ட்ரஸ். பதிலுக்கு, புலம்பெயர்ந்தோரைக் கட்டுப்படுத்தும் இருநாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தைக் கிடப்பில் போட்டுவிட்டது பிரான்ஸ்.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், உக்ரைன், பிரித்தானியா, நார்வே, பால்கன் நாடுகள் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்கள், நேற்று, ‘ஐரோப்பிய அரசியல் சமூகம்’ என்னும் புதிய அமைப்பின் துவக்க உச்சி மாநாட்டில் சந்தித்தனர். அந்த மாநாடு செக் குடியரசின் தலைநகரான Prague நகரில் நடைபெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தையும் தாண்டி பல நாடுகள் ஒற்றுமையாக இணைந்துள்ள ஒரு அமைப்பாகும் இது.
இந்த மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானும், பிரித்தானிய பிரதமரான லிஸ் ட்ரஸ்ஸும் சந்தித்துப் பேசும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.
அப்போது, சட்ட விரோத புலபெயர்வோர் சிறுபடகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவதைத் தடுப்பது தொடர்பில் ஒத்துழைக்க இருவரும் ஒப்புதல் தெரிவித்தனர்.
மேக்ரானுடன் நடந்த பேச்சு வார்த்தைக்குப் பின், மேக்ரான் நண்பர்தான் என கூறியுள்ளார் லிஸ் ட்ரஸ்!