மகாராணியின் இறுதிச்சடங்குக்கு வந்த இடத்தில் ஊர் சுற்றிப் பார்க்கச் சென்ற மேக்ரான்: கேலி செய்யும் இணையம்...
பிரித்தானிய மகாராணியாரின் இறுதிச்சடங்குக்கு வந்த இடத்தில் ஊர் சுற்றிப்பார்க்க முடிவெடுத்த மேக்ரான், கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.
ஒரு கருப்புக் கண்ணாடி அணிந்துவிட்டால் தன்னை யாருக்கும் தெரியாது என்ற அவரது புத்திசாலித்தனத்தைக் கண்டு விழுண்டு விழுந்து சிரிக்கிறது இணையம்.
பிரித்தானிய மகாராணியாரின் இறுதிச்சடங்குக்கு வந்த இடத்தில், ஊர் சுற்றிப்பார்க்க முடிவெடுத்த பிரான்ஸ் ஜனாதிபதியை கேலியும் கிண்டலும் செய்கிறது இணையம்.
மறைந்த பிரித்தானிய மகாராணியாரின் இறுதிச்சடங்குக்காக உலகத் தலைவர்கள் பலர் பிரித்தானியாவுக்கு வந்திருந்த நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி லண்டனை சுற்றிப்பார்க்க மனைவியுடன் காலாற நடக்கத்துவங்கிவிட்டார்.
பழைய தமிழ்ப்படங்களில், கன்னத்தில் மரு ஒன்றை ஒட்டவைத்துவிட்டால் மற்றவர்களுக்கு அடையாளம் தெரியாது என மக்களை நம்பவைத்த கதாநாயகர்களைப்போல, ஒரு கருப்புக் கண்ணாடி அணிந்து நடைபயின்ற மேக்ரானைப் பார்த்து பலர் சிரித்தார்கள்.
இன்னொரு பக்கம் மக்களோடு மக்களாக நடந்த மேக்ரானை பலருக்கு அடையாளம் தெரியவில்லை என்பது இன்னொரு வேடிக்கை.
விஜய் படம் ஒன்றில், என்ன வேடம் போட்டாலும் வில்லன் கூட்டம் வடிவேலுவை அவரது கொண்டையை வைத்து அடையாளம் கண்டுவிடுவதைப் போல, தன்னுடனேயே தன் மனைவி பிரிஜிட்டும், ஒரு கூட்டம் பாதுகாவலர்களும் நடக்க, மக்களுக்கு அவர்தான் பிரான்ஸ் ஜனாதிபதி எனத் தெரியாதா என்ன?
ஒரு கூட்டம் பனிக்கரடிகளுக்கு மத்தியில், கருப்புக் கண்ணாடி அணிந்து நடந்து சென்ற ஒரு ஒட்டகச்சிவிங்கி, தன்னை யாருக்கும் அடையாளம் தெரியாது என நினைத்துக்கொண்டதாம். அதுபோல தன்னை யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று எண்ணிக்கொண்டு யாருக்கும் தெரியாமல் ஊர் சுற்றிப் பார்க்கிறாராம் பிரான்ஸ் ஜனாதிபதி என நக்கலடிக்கிறார் ஒருவர்.