ஒன்லைனில் இதைச் செய்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்: பிரான்ஸ் ஜனாதிபதி கடும் எச்சரிக்கை
ஒன்லைனில் போலிச்செய்திகளைப் பரப்புவோர் அதற்கு பொறுப்பேற்கவேண்டிவரும் என்று கூறியுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வரும் ஏப்ரலில் பிரான்சில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த விடயம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, கடந்த ஆண்டு, ஜனவரி மாதம் 6ஆம் திகதி, அமெரிக்கத் தலைநகரில் தாக்குதல் தொடர்பில் ஏராளமான போலிச்செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன.
ஆகவே, ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், போலிச்செய்திகளால் உருவாகும் மோசமான விளைவுகள் குறித்து அறிக்கை ஒன்றைத் தயாரிக்குமாறு ஆணையம் ஒன்றிற்கு மேக்ரான் உத்தரவிட்டிருந்தார்.
அந்த ஆணையம், நேற்று தனது அறிக்கையை ஜனாதிபதியிடம் அளித்தது. அந்த அறிக்கை, பிள்ளைகள் சமூக ஊடகங்களில் தாங்கள் பார்ப்பதை அப்படியே நம்பிவிடாமல் அவற்றைக் கேள்வி கேட்பது, வெளிநாட்டு சக்திகள் தேர்தலில் ஊடுருவாமல் திறம்பட தடுப்பது, போலிச்செய்திகளைப் பரப்பி சட்டம் ஒழுங்குக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு தடைகள் விதிப்பது முதலான பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
இந்த அறிக்கையைத் தொடர்ந்தே மேக்ரான், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். நேற்று பாரீஸில் உரையாற்றிய அவர், ஒன்லைனில் பரப்பப்படும் தவறான தகவல்கள் மற்றும் போலிச் செய்திகளால் குடியரசுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து எச்சரித்தார்.
ஊடகவியலாளர்களைப் போலவே, இணைய தளங்கள், சமூக ஊடக பிரபலங்கள் மற்றும் இணையத்தில் மக்களுடைய கவனத்தை ஈர்ப்பதற்காக பல்வேறு விடயங்களைச் செய்வோர் ஆகியோரும் தங்கள் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்கும் வகையில் சட்டங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்றார் அவர்.
அத்துடன் வெளிநாட்டு சக்திகளிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பதையும் நாம் அறிந்துகொள்ளவேண்டும் என்றார் மேக்ரான்.
2017ஆம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில், ஹேக்கர்கள் ஒரு முக்கிய ஆவணம் லீக்காகச் செய்ததால், அது மேக்ரானின் தேர்தல் பிரச்சாரத்தை கடுமையாக பாதித்தது.
அதன் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக குற்றம் சாட்டப்பட, வழக்கம் போல ரஷ்யா அதை மறுத்தது.
ஆகவேதான், தற்போது ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நிலையில், மேக்ரானின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.