ராஜினாமா செய்தவரையே மீண்டும் பிரான்ஸ் பிரதமராக்கினார் மேக்ரான்
பிரான்ஸ் அரசியலில் கடும் குழப்பம் நிலவிவரும் நிலையில், பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தவரையே மீண்டும் பிரதமராக்கியுள்ளார் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.
திடீரென ராஜினாமா செய்த பிரதமர்
சென்ற மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி, பிரான்சின் புதிய பிரதமராக செபாஸ்டியன் (Sebastien Lecornu) என்பவரை நியமித்தார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.
ஞாயிற்றுக்கிழமையன்று அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்த பிரதமர் செபாஸ்டியன், திங்கட்கிழமை திடீரென தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதைத் தொடர்ந்து, அடுத்த பிரதமரை நியமிக்கவேண்டிய கட்டாயம் ஜனாதிபதி மேக்ரானுக்கு ஏற்பட்டது. மீண்டும் பிரான்ஸ் அரசியலில் குழப்பங்கள் தலைதூக்க, மேக்ரான் என்ன செய்யப்போகிறார் என்பதைப் பார்க்க எதிர்க்கட்சிகள் ஆவலுடன் காத்திருந்தன.
ராஜினாமா செய்தவரையே...
இந்நிலையில், ராஜினாமா செய்த செபாஸ்டியனையே மீண்டும் பிரதமராக்கியுள்ளார் மேக்ரான்.
செபாஸ்டியன், திங்கட்கிழமைக்குள் பட்ஜெட் குறித்த வரைவு மசோதா ஒன்றை சமர்ப்பித்தாகவேண்டும்.
எதிர்க்கட்சிகள் எப்படியாவது மேக்ரானை ராஜினாமா செய்யவைக்க முடிவுசெய்துள்ள நிலையில், அவை மீண்டும் செபாஸ்டியன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரலாம்.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் செபாஸ்டியன் தப்பினால், அவரது பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.
ஆனால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் செபாஸ்டியனை எதிர்க்கட்சிகள் பதவியிழக்க வைக்குமானால், மீண்டும் பிரான்சில் குழப்பம்தான் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |