மேக்ரானுக்கு வாக்களிக்க மாட்டோம்: பிரான்ஸ் ஜனாதிபதிக்கு சொந்த ஊரிலேயே எதிர்ப்பு
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு, அவர் பிறந்த ஊரிலேயே ஆதரவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மேக்ரானுக்கு வாக்களிக்க மாட்டோம்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் பிறந்த ஊர், வட பிரான்சிலுள்ள Amiens என்னும் ஊராகும். அவரது மனைவி பிரிஜிட், உள்ளூரில் பிரபலமான Trogneux என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய குடும்பத்துக்குச் சொந்தமான இனிப்புகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இப்போதும் அங்கு செயல்பட்டுவருகிறது.
மேக்ரான் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்துள்ளார். இந்நிலையில், அவரது ஊர்க்காரர்கள் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளார்கள் என்பதை அறிய ஊடகவியலாளர்கள் அவரது ஊருக்கே சென்று மக்களிடம் ஆய்வு நடத்தியுள்ளார்கள். ஆய்வில், மேக்ரானுக்கு அவர் பிறந்த ஊரிலேயே ஆதரவில்லை என்பது தெரியவந்துள்ளது
பிரான்ஸ் ஜனாதிபதிக்கு சொந்த ஊரிலேயே எதிர்ப்பு
இரண்டு வயது மகனின் தாயான, சுத்தம் செய்யும் வேலையைச் செய்யும் Aurelie (37) என்னும் பெண், தனது வாக்கு National Rally கட்சிக்குதான் என்கிறார். அவர்கள்தான் எங்களுடன், அதாவது மக்களுடன் நெருக்கமாக இருக்கிறார்கள் என்று கூறும் Aurelie, ஆப்பிரிக்க நாடான Chadஐ சேர்ந்த இரண்டு தோழிகள் எனக்கு இருக்கிறார்கள். அவர்களும் National Rally கட்சிக்குதான் வாக்களிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்கள் என்கிறார்.
தற்போதைய ஆட்சியில், எங்கள் ஊரிலேயே எங்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறும் Aurelie, நான் அதிகாலை 4.30 மணிக்கு வேலைக்கு புறப்படுவேன், முன்பெல்லாம் நான் நடந்து அல்லது சைக்கிளில் வேலைக்குச் செல்வேன், இப்போது அப்படி போக பயமாக இருக்கிறது என்கிறார்.
பெயிண்ட் டெலிவரி செய்யும் வேலையைச் செய்யும் Christopher (36) என்பவர், ஒவ்வொரு மாதமும், மாதக்கடைசியில் நான் வீட்டுக்குச் செல்வதில்லை, வீட்டுக்குச் செல்ல காருக்குப் பெட்ரோல் போடவேண்டும், அதற்கு என்னிடம் பணம் இருப்பதில்லை, ஆகவே, வீட்டுக்குச் செல்வதற்கு பதிலாக காரிலேயே படுத்துத் தூங்கிவிடுகிறேன் என்கிறார்.
மேக்ரான் நிறைய வாக்குறுதிகள் அளித்தார், அதை நான் நம்பினேன், ஆனால், வாக்களித்த எதையும் அவர் நிறைவேற்றவில்லை, விலைவாசியால் அவதியுறுகிறோம், ஆகவே, இம்முறை National Rally கட்சி மீது நம்பிக்கை வைக்கப்போகிறேன் என்கிறார்.
ஆக, சொந்த ஊரிலேயே மேக்ரானுக்கு ஆதரவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஊடகவியலாளர்கள் சந்தித்த 20 பேரில், ஒருவர் மட்டுமே மேக்ரானுக்கு வாக்களிப்பேன் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |