பிரான்ஸ் தொடர்பில் தவறான தகவல்கள்! டெலிகிராம் தலைவரின் கைது அரசியல் முடிவல்ல - ஜனாதிபதி மேக்ரான்
டெலிகிராம் நிறுவனர் பிரான்சில் கைது செய்யப்பட்டது அரசியல் முடிவல்ல என ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
டெலிகிராம் நிறுவனர் கைது
பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு வெளியே Bourget விமான நிலையத்தில் டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் (Pavel Durov) கைது செய்யப்பட்டார்.
டெலிகிராம் செயலியில் வன்முறையைத் தூண்டும் நடவடிக்கைகள் என பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
ரஷ்யாவில் பிறந்த துரோவ்வின் (39) கைது அரசியல் தொடர்பில் கேள்விகளை எழுப்பியதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், 2021 முதல் துரோவ் பிரான்ஸ் குடிமகன் என்றே ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஊடகங்கள் கூறி வருகின்றன.
மேக்ரான் ட்வீட்
இந்த நிலையில் பாவெல் துரோவ்வின் கைது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மேக்ரான் விளக்கம் அளித்து ட்வீட் செய்துள்ளார்.
அவர் தனது பதிவில், "பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரான்ஸ் தொடர்பான தவறான தகவல்களைப் பார்த்தேன். கருத்து சுதந்திரம் மற்றும் தகவல் தொடர்பு, புதுமை மற்றும் தொழில்முனைவோர் உணர்வு ஆகியவற்றில், பிரான்ஸ் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளது. அது அப்படியே இருக்கும்.
சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படும் ஒரு மாநிலத்தில், குடிமக்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிப்பதற்கும், சமூக ஊடகங்களிலும் நிஜ வாழ்க்கையிலும் சுதந்திரங்கள் சட்டக் கட்டமைப்பிற்குள் நிலைநிறுத்தப்படுகின்றன.
முழு சுதந்திரத்துடன், சட்டத்தை அமுல்படுத்துவது நீதித்துறையின் கையில் உள்ளது. பிரெஞ்சு மண்ணில் டெலிகிராம் தலைவரின் கைது, நடந்து வரும் நீதி விசாரணையின் ஒரு பகுதியாக நடந்தது. இது எந்த வகையிலும் அரசியல் முடிவு அல்ல. இந்த விவகாரத்தில் நீதிபதிகள்தான் தீர்ப்பளிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |