சீனாவும் பிரான்சும் வேறுபாடுகளை களையவேண்டும்: மேக்ரான் கோரிக்கை
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், மூன்று நாள் பயணமாக சீனா சென்றுள்ளார்.
வேறுபாடுகளைக் களையவேண்டும்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் சீன ஜனாதிபதியாகிய ஜி ஜின்பிங்கை இன்று சீன தலைநகர் பீஜிங்கில் சந்தித்தார்.

அப்போது, சில நேரங்களில் இரு நாடுகளுக்கிடையே வேறுபாடுகள் இருக்கும். நல்ல நோக்கங்களுக்காக அந்த வேறுபாடுகளைக் களைவது நமது பொறுப்பு என்றார் மேக்ரான்.
அத்துடன், நம் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது நன்மை பயக்கும் என்றார் மேக்ரான். அதாவது, உக்ரைன் விடயத்தில் சீனாவும் பிரான்சும் இணைந்து செயல்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார் மேக்ரான்.
மேக்ரானின் சீனப்பயணத்தின் முக்கிய நோக்கம், ரஷ்ய உக்ரைன் போரில் சீனா ரஷ்யாவுக்கு உதவக்கூடாது என வலியுறுத்துவதற்காகத்தான்.
ஏனென்றால், உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்ததற்கு சீனா இதுவரை கண்டனம் தெரிவிக்கவேயில்லை.

அத்துடன், சீனா ரஷ்யாவுக்கு நிதி மற்றும் ராணுவ உதவி அளித்துவருவதாக மேக்ரானும் மற்ற ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களும் குற்றம் சாட்டியுள்ளார்கள், சீனா அதை மறுத்துவருகிறது.
இந்நிலையில், ரஷ்ய உக்ரைன் போரில் விரைவாக ஒரு போர் நிறுத்தத்தை ரஷ்யா மேற்கொள்ள, ரஷ்யாவை சீனா வலியுறுத்தவேண்டும் என பிரான்ஸ் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், சீனா என்ன பதிலளித்துள்ளது அல்லது முடிவெடுத்துள்ளது என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |