பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை... மேக்ரான் எச்சரிக்கை
Demonstrations will be banned if necessary, Macron says: தேவைப்பட்டால், பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படும் என்று கூறியுள்ளார் மேக்ரான்.
விலைவாசி உயர்வு முதலான பல்வேறு விடயங்களுக்கு எதிரான பிரான்சில் ஏராளமான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவரும் நிலையில், பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.
மேக்ரான் எச்சரிக்கை
சனிக்கிழமையன்று, அரை மில்லியனுக்கும் அதிகமானோர் பிரான்சின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட நிலையில், அரசு கட்டிடங்கள், பொலிஸ் நிலையங்கள் உட்பட பல இடங்கள் மீது தாக்குதல், தீவைப்பு, சூறையாடல் என நாட்டில் வன்முறை தலைவிரித்தாடுகிறது.

இந்நிலையில், தேவைப்பட்டால் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நமது நகரங்கள், பொதுக் கட்டிடங்கள் மற்றும் கடைகளைப் பாதுகாப்பதற்காக, மாவட்ட ஆட்சியர்கள், மேயர்களுடன் ஒருங்கிணைந்து முடிவுகளை எடுப்பார்கள்.
மேலும், தேவைப்படும் இடங்களில், சில கூட்டங்களுக்குத் தடை விதிப்பது மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்வார்கள் என்றும் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், காவல்துறையின் பணிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே அது குறித்து ஆராயுமாறு உள்துறை அமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் மேக்ரான் கூறியுள்ளார்.
கலவரக்காரர்கள் தண்டிக்கப்பட்டு, தங்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு பொறுப்பேற்க வைக்கப்படுவார்கள் என்று கூறியுள்ள மேக்ரான், எதையேனும் நாசம் செய்தவர்கள் அதற்கான விலையைச் செலுத்த வேண்டும் என்றும், சூறையாடியவர்கள் சேதத்திற்கு ஈடு செய்ய வேண்டும் என்றும், குடியரசை கவிழ்க்க முயன்றவர்கள் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.