ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் நாட்டவர்கள்: மேக்ரான் தெரிவித்துள்ள தகவல்
ஈரான் நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் நாட்டவர்கள் இருவர் ஈரானிலிருந்து புறப்பட்டுவிட்டதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
சிறைத்தண்டனை
2022ஆம் ஆண்டு, பிரான்ஸ் குடிமக்களான Cecile Kohler (41) மற்றும் Chuck Paris (72) என்னும் தம்பதியர் ஈரானுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், ஈரான் அரசால் கைது செய்யப்பட்டார்கள்.

பிரான்ஸ் உளவுத்துறைக்காக வேலை பார்த்ததாகவும், இஸ்ரேல் நாட்டுடன் இணைந்து செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு Chuck Parisக்கு 17 ஆண்டுகளும், Cecile Kohlerக்கு 20 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் நீதித்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கடந்த நவம்பர் மாதம் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்திருந்தார்.
என்றாலும், ஈரான் தலைநகரான டெஹ்ரானிலுள்ள பிரெஞ்சு தூதரகத்தில் அவர்கள் இருவரும் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் ஈரானிலிருந்து புறப்பட்டுவிட்டதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தற்போது தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த தம்பதியர் தற்போது வீடு திரும்பிக்கொண்டிருப்பது நம் அனைவருக்கும், குறிப்பாக அவர்களுடைய குடும்பத்தினருக்கும் பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது என்று கூறியுள்ள மேக்ரான், இந்த விடயத்தில் மத்தியஸ்தம் செய்த ஓமானுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரெஞ்சு வெளியுறவு அமைச்சக அலுவலர் ஒருவர், Chuck Parisம் Cecile Kohlerம், நேற்று ஈரானிலிருந்து வெளியேறி, பிரான்ஸ் தூதருடன் அஜர்பைஜான் நாட்டுக்குச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தம்பதியரின் மகளான Anne-Laure Paris, தன் பெற்றோர் பிரான்சுக்கு வருவதை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகவும், அவர்களைக் கட்டியணைத்துக்கொள்ள காத்திருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் வாழ்ந்துவந்த ஈரான் மாணவியான Mahdieh Esfandiari என்பவர் இஸ்ரேலுக்கெதிராக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டிருந்தார்.

அவருக்கு பதிலாகத்தான் ஈரான் Chuck Parisஐயும் Cecile Kohlerஐயும் விடுவிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |