ஆட்சி கவிழ்ந்தாலும் பதவி விலகமாட்டேன்... பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்
பிரான்சில் பிரதமர் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தாலும் பதவி விலகமாட்டேன் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிர்கொள்ளும் அரசு
பிரான்ஸ் அரசுக்கு சுமார் 3 ட்ரில்லியன் யூரோக்கள் அளவுக்கு கடன் உள்ளது. அரசை கடனிலிருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டுவருகிறார் பிரதமர் பிரான்சுவா பேய்ரூ (Francois Bayrou).
அரசின் கடனைக் குறைக்கும் வகையில், பணத்தை மிச்சப்படுத்துவதற்காக, இரண்டு அரசு விடுமுறைகளை குறைக்கும் திட்டம் ஒன்றை முன்வைத்தார் பேய்ரூ. ஆனால், அது பொதுமக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், சில அமைப்புகள் பட்ஜெட் தொடர்பில் பிரதமர் முன்வைத்துள்ள விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், செப்டம்பர் 10ஆம் திகதி நாடு முழுவதும் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்ய, மக்கள் திட்டமிட்டுவரும் நிலையில், செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியுள்ளார் பிரதமர் பேய்ரூ.
ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் பேய்ரூவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
அப்படி வாக்கெடுப்பில் பேய்ரூ தோற்கடிக்கக்கப்பட்டால், ஆட்சி கவிழும். பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அடுத்த பிரதமராக மற்றொருவரை நியமிப்பார்.
ஆனால், புதிய பிரதமரை நியமிப்பதில் எந்த பலனும் இல்லை. எனவே, ஜனாதிபதி மேக்ரான் பதவி விலகவேண்டும் என எதிர்க்கட்சி தரப்பிலிருந்து குரல்கள் வலுக்கத் துவங்கியுள்ளன.
ஆட்சி கவிழ்ந்தாலும் பதவி விலகமாட்டேன்
இந்நிலையில், பிரதமர் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தாலும் பதவி விலகமாட்டேன் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் மக்கள் என்னை நம்பி இந்த ஆட்சிப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துள்ளார்கள். ஆகவே, எனது பதவிக்காலம் முழுவதும் அவர்களுக்கு சேவை செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் மேக்ரான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |