ஹோர்முஸ் ஜலசந்தியை வைத்து பிளாக் மெயில் செய்யக்கூடாது: பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்
French President Macron stresses on need to open Hormuz: ஹோர்முஸ் ஜலசந்தியை திறப்பதன் அவசியம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் வலியுறுத்தியுள்ளார்.
நியூயார்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா பொதுச்சபையின் 81ஆவது கூட்டத்தின்போது, பல தலைவர்கள் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் சந்தித்துப் பேசியுள்ளார்கள்.
மேக்ரான் ட்ரம்ப் சந்திப்பு
அவ்வகையில், அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பை சந்தித்துப் பேசியுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.

அதைத் தொடர்ந்து, தீவிரமடைந்து வரும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கும் பொருட்டு, ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறப்பதற்கான சரியான ஒப்பந்தத்தைக் கண்டறிவதே தங்கள் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம் என்று கூறினார் மேக்ரான்.
ஈரானுடன் போர் துவங்கிய விடயத்தையே விமர்சித்த மேக்ரான், ஒரு நாட்டின் மீது குண்டுவீசி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது சாத்தியமான ஒன்று என்று தான் நினைக்கவில்லை என்றும், தன்னைப் பொறுத்தவரை அது ஒரு நல்ல வழிமுறை அல்ல என்றும் குறிப்பிட்டார்.
ஏனெனில், அது பலனளிக்காது என்று கூறிய அவர், கடந்த பல பத்தாண்டுகளில் இந்தத் தவறை நாம் பலமுறை செய்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக, சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்ட ஒரு பதிவில் ’உலகின் நெருக்கடிகள் நமது எல்லைகளோடு நின்றுவிடுவதில்லை. அவை நமது குடிமக்களைப் பாதிக்கின்றன, நமது பாதுகாப்பு, வாங்கும் சக்தி, எதிர்காலம் ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளன.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்காக நியூயார்க் வந்தடைந்த நான், அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப்பையும், உக்ரைன் ஜனாதிபதியான ஜெலென்ஸ்கியையும் சந்தித்தேன்.
நமது நலன்களைப் பாதுகாத்தல், சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துதல், மற்றும் முடிவுகளை அடையக்கூடிய கூட்டணிகளைக் கட்டமைத்தல் என, ஒரு சீர்குலைந்த உலகில், பிரான்ஸ் தனது குரலை ஒலிக்கச் செய்கிறது. அது, அமைதி, இறையாண்மை மற்றும் ஒத்துழைப்புக்கான ஒரு குரல்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஐ.நா பொதுச் சபையின் 81வது கூட்டத்தில் ஆற்றிய உரையின்போது, மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் குறித்துப் பேசிய மேக்ரான், ஹோர்முஸ் ஜலசந்தியை பிளாக் மெயில் செய்வதற்கும், அதாவது, மிரட்டலுக்கு பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தியதோடு, ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது மிகவும் அவசியம் என்றும் கூறியுள்ளார்.