உலகிலேயே முதன் முதலில் பிரான்ஸ் தான் இதை செய்துள்ளது: இமானுவல் மேக்ரான்
ஐரோப்பிய ஒன்றியம் காடு அழிப்பினால் ஏற்படும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்திருப்பது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ட்வீட் செய்துள்ளார்.
420 மில்லியன் ஹெக்டேர் அளவு காடுகள்
ஐரோப்பிய ஒன்றியத்தை விட பெரிய நிலப்பரப்பு அல்லது சுமார் 420 மில்லியன் ஹெக்டேர் அளவு காடுகள் கடந்த மூன்று தசாப்தங்களாக உலகம் முழுவதும் அழிக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
இதனால் காடுகள் அழிக்கப்படுவதற்கு இருக்கும் முக்கிய காரணிகளை தடை செய்வது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்தது. அதன்படி, காடுகள் அழிக்கப்படுவதற்கு பெருமளவில் பங்களிப்பாக இருப்பது காபி, கோகோ மற்றும் சோயா உள்ளிட்ட பொருட்கள் தான் என ஐரோப்பிய ஒன்றியம் கூறியதுடன், அவற்றை தடை செய்ய உடன்பாட்டையும் எட்டியுள்ளது.
@AP/File
புதிய சட்டம்
இதுதொடர்பாக ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சந்தையில் வைக்கப்பட்டுள்ள முக்கிய பொருட்களின் தொகுப்பு ஐரோப்பிய ஒன்றியத்திலும் உலகின் பிற இடங்களிலும் காடழிப்பு மற்றும் காடுகளின் அழிவுக்கு இனி பங்களிக்காது என்பதை புதிய சட்டம் உறுதி செய்யும்' என தெரிவித்துள்ளது.
மேலும், சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆண்டு வருவாயில் நான்கு சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சட்டம் அமுலுக்கு வந்த ஓராண்டுக்குப் பிறகு, மற்ற மரங்கள் நிறைந்த நிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டுமா என்பதை பார்க்க மறுஆய்வு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இறக்குமதிக்கு தடை செய்யும் பிரான்ஸ்
இந்த நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தனது பதிவில், 'இதை அடைய நாங்கள் உழைத்துள்ளோம், பிரான்ஸ் வழி காட்டியுள்ளது: ஐரோப்பிய ஒன்றியம் காடழிப்பினால் ஏற்படும் பொருட்களை இறக்குமதி செய்வதை தடை செய்கிறது. உலகிலேயே முதன் முதலில் நாம் தான்! காலநிலை மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கான போர் வேகமெடுத்து வருகிறது' என தெரிவித்துள்ளார்.
Nous avons œuvré pour y arriver et la France a montré la voie : l’Union européenne interdit l'importation de produits issus de la déforestation. Nous sommes les premiers au monde à le faire ! La bataille pour le climat et la biodiversité s’accélère.
— Emmanuel Macron (@EmmanuelMacron) December 6, 2022