பிரித்தானியாவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி வேண்டாம்: பிரெஞ்சு மக்களிடம் கோரிக்கை விடுத்த மேக்ரான்
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் இக்கட்டான நிலைக்கு ஆளாகாமல் இருக்க பிரெஞ்சு மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரான்சில் ஜனாதிபதி தேர்தலின் இறுதிச் சுற்று வாக்கெடுப்பானது ஏப்ரல் 24ம் திகதி ஞாயிறன்று முன்னெடுக்கப்படுகிறது. பிரான்சின் அதிகாரத்தின் கீழில் உள்ள பிரதேசங்களில் வாக்குப்பதிவுகள் ஏற்கனவே துவங்கியுள்ளன.
இந்த நிலையில், கனடாவின் வடக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள Saint Pierre மற்றும் Miquelon பிரதேசத்தில் முதல் வாக்கை 90 வயதான நபர் பதிவு செய்துள்ளார்.
பிரெஞ்சு தீவுகளில் படிப்படியாக வாக்குப்பதிவுகள் முன்னெடுக்கப்பட்டு, 24ம் திகதி பிரான்ஸ் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். இந்த நிலையிலேயே, பிரித்தானியா போன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரான்சும் வெளியேறாமல் இருக்க, பிரெஞ்சு மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் விடுத்துள்ளார்.
2022ம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் தீவிர வலதுசாரி வேட்பாளர் மரைன் லீ பென்னை எதிர்த்து மேக்ரான் வெற்றிபெற்றால், கடந்த 20 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற முதல் பிரெஞ்சு ஜனாதிபதி என்ற சாதனையை படைப்பார்.
இதுவரை வெளியான அனைத்து தேர்தல் கருத்துக்கணிப்புகளும் இமானுவல் மேக்ரான் வெற்றிபெறுவார் என்றே கூறி வந்தாலும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதம் இந்தமுறை இருக்காது என்றே கூறப்படுகிறது.
பெரும் எண்ணிக்கையிலான மக்கள் முக்கியமான இரு வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க மறுக்கலாம் அல்லது, வீட்டிலேயே இருந்துவிடலாம் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தேர்தல் கருத்துக்கணிப்புகள் ஒன்றும் தேர்தலை முடிவு செய்து விடாது என குறிப்பிட்டுள்ளார் மரைன் லீ பென். மேலும், அதிக எண்ணிக்கையிலான மக்கள் வாக்குப்பதிவை தவிர்க்க முடிவு செய்தால், இமானுவல் மேக்ரானுக்கு அது சவாலாக முடியும் எனவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.