மத்திய தரைக்கடலில் போர்கப்பல்களை நிலைநிறுத்தும் பிரான்ஸ்- சைப்ரஸ் செல்லும் மேக்ரான்
மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் இரண்டாவது வாரமாக தொடரும் நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் சைப்ரஸ் நாட்டிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
சமீபத்தில் சைப்ரஸ் நாட்டின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியத்தைத் தொடர்ந்து, பிரான்ஸ் தனது CharlesdeGaulle விமானக் கப்பலை மத்திய தரைக்கடலுக்கு அனுப்பியுள்ளது.
கூடுதலாக, ஒரு போர்க்கப்பல் மற்றும் வான்வழி பாதுகாப்பு பிரிவுகளும் சைப்ரஸ் நாட்டில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், திங்கட்கிழமையன்று மேக்ரான் சைப்ரஸ் ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸ் மற்றும் கிரேக்க பிரதமர் கிரியகோஸ் மிட்ஸோடாகிஸ் ஆகியோரை பாபோஸ் நகரத்தில் சந்திக்கவுள்ளார்.

சைப்ரஸ் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், மத்திய தரைக்கடல் பிராத்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த சந்திப்பு மேற்கொள்ளப்படுகிறது.
பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றிய நாடான சைப்ரஸுடன் தனது மூலோபாய கூட்டாண்மையை வலியுறுத்தி, “சமீபத்தில் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலால் பாதிக்கப்பட்ட சைப்ரஸுக்கு பிரான்ஸ் முழு ஆதரவு தருகிறது” என தெரிவித்துள்ளது.
மேலும், செங்கடல் மற்றும் ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கடல் போக்குவரத்து பாதுகாப்பின் முக்கியத்துவத்தை மேக்ரான் வலியுறுத்த உள்ளார்.
உலகளாவிய எண்ணெய் மற்றும் LNG-இன் 20 சதவீதம் இந்த நீரிணை வழியாகச் செல்கிறது. சமீபத்தில் பல கப்பல்கள் தாக்கப்பட்டதால், கடல் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமாகியுள்ளது.
சைப்ரஸில் உள்ள ஐரோப்பிய குடிமக்களின் பாதுகாப்பும், அவர்களை மீட்கும் நடவடிக்கைகளும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படுகின்றன. ஏற்கனவே 4,300 பிரான்ஸ் குடிமக்கள் போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பிரித்தானியா மற்றும் இத்தாலியும் தங்களது போர்க்கப்பல்களை சைப்ரஸுக்கு அனுப்பி, பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
France warships Mediterranean, Iran Israel war impact, Cyprus drone attack France response #Macron #France #Cyprus #Mediterranean