பெண் வேட்பாளரின் உடையால் சர்ச்சை: இமானுவல் மேக்ரான் கட்சி அதிரடி நடவடிக்கை
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர் தனது உடையால் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறார்.
ஜூன் மாதம் பிரான்சில் நடைபெற இருக்கும் உள்ளூர் தேர்தல்களுக்கான பிரச்சாரங்கள் நடைபெற்றுவரும் நிலையில், போஸ்டர் ஒன்றில் தன் சக வேட்பாளர்களுடன் Sara Zemmahi என்ற பெண் வேட்பாளர் நிற்கும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. அந்த புகைப்படத்தால்தான் இப்போது சர்ச்சை உருவாகியுள்ளது.
அந்த புகைப்படத்தில், தலையில் Sara ஸ்கார்ஃப் அணிந்து நிற்பதுதான் இப்போது பிரச்சினை. ஏற்கனவே ஆசிரியர் சாமுவேல் இஸ்லாமிய தீவிரவாதியால் தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டதிலிருந்து பிரான்சில் இஸ்லாமியர்களுக்கெதிரான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை உலகமே அறியும். பாகிஸ்தான் முதலான இஸ்லாமிய நாடுகள் பிரான்சை கடுமையாக விமர்சித்தது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், இஸ்லாமியர்களின் அடையாளமான ஸ்கார்ஃப் அணிந்து Sara நிற்கும் படம் வெளியாக, அவரது சொந்தக் கட்சியினரே கொந்தளித்துப்போயிருக்கிறார்கள். மேக்ரானின் La Republique en Marche கட்சியின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் Stanislas Guerini என்பவர், தங்கள் கட்சி Saraவை ஆதரிக்கப்போவதில்லை என்று கூறிவிட்டார்.
வெளிப்படையான மதத்தின் அடையாளங்களுக்கு போஸ்டர்களில் இடமில்லை, அது எந்த மதமானாலும் சரி என்று கூறிவிட்டார் அவர். மேக்ரானுக்கு நெருக்கமானவரான Aurore Bergé என்னும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறும்போது, நீங்கள் தேர்தலில் ஒரு வேட்பாளராக நிற்கும்போது, நீங்கள் மொத்த பிரான்சின் பிரதிநிதியாக நிற்கிறீர்கள், ஒரு சமுதாயம் அல்லது மதத்தின் பிரதிநிதியாக அல்ல என்று கூறியுள்ளார்.