ராஜ குடும்பத்திலிருந்து ஹாலிவுட்டுக்கு... இளவரசர் ஹரியும் மேகனும் இடமாற்றம்
ராஜ குடும்பத்திலிருந்த இளவரசர் ஹரியும் மேகனும் ஹாலிவுட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். லண்டனிலுள்ள பிரபல அருங்காட்சியகமான மேடம் துசாட்ஸ் (Madame Tussauds) அருங்காட்சியகம், பிரபலங்களின் மெழுகுச் சிலைகளுக்குப் பேர் போனது.
பிரித்தானிய மகாராணி, முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் விளையாட்டு உலக பிரபலங்கள் வரை, பலரது தத்ரூபமான மெழுகுச் சிலைகள் அந்த அருங்காட்சியகத்தில் நிறுவப்படுள்ளன.
அருங்காட்சியகத்துக்கு வரும் மக்கள், தங்களுக்குப் பிடித்தமானவர்களின் சிலைகளுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதுண்டு. இந்நிலையில், முன்பு, ராஜ குடும்பத்தினரின் மெழுகுச்சிலைகளுடன் இளவரசர் ஹரி மேகனின் சிலைகளும் நிறுத்தப்பட்டிருந்தன.
சொல்லப்போனால், மேகன் ஹரியை மணப்பதற்கு 10 நாட்கள் முன்பே மேகனின் சிலையை அந்த அருங்காட்சியகம் தயார் செய்துவிட்டது. பின்னர், மகாராணியார், இளவரசர் பிலிப் ஆகியோரது சிலைகள் நடுவில் நிற்க, இடது பக்கத்தில் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் சிலைகளும், வலது பக்கத்தில் ஹரி மேகன் சிலைகளும் நிறுத்தப்பட்டன.
ஆனால், ஹரியும் மேகனும் ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டபோது, அவர்கள் இருவரின் சிலைகளும் ராஜ குடும்பத்தினரின் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து அகற்றப்பட்டுவிட்டன.
தற்போது அவை, ஹரி மேகனின் ஹாலிவுட் நண்பர்களுடைய சிலைகள் இருக்கும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஹரி மேகனின் சிலைகளை அகற்றும் நேரத்தில், அருங்காட்சியகம் ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில், அவர்களது விருப்பங்களையும் நாங்கள் நிறைவேற்றவேண்டும், #Megxit என்று குறிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.