ராஜ குடும்பத்துக்குள் தகராறு... முதல் மனைவியை சுட்ட இரண்டாவது மனைவி
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் வாழும் ராஜ குடும்பம் ஒன்று, குடும்பத் தகராறு காரணமாக தலைப்புச் செய்தியாகியுள்ளது.
ராஜ குடும்பத்துக்குள் தகராறு...
இந்தியாவை வெள்ளையர்கள் ஆட்சி செய்வதற்கு முன் அங்கு பல்வேறு ராஜ குடும்பங்கள் இருந்ததை பலரும் அறிந்திருக்கக்கூடும்.
சுதந்திரத்துக்குப் பின் அவர்களும் சாதாரண குடிமக்கள் போல வாழத் துவங்கிவிட்டார்கள், அவர்களைக் குறித்து பெரிதாக செய்திகள் எதுவும் வருவதில்லை.
இந்நிலையில், ராஜ குடும்பம் ஒன்றிற்குள் நடந்த குடும்பத் தகராறு காரணமாக, அந்தக் குடும்பத்தைக் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
முதல் மனைவியை சுட்ட இரண்டாவது மனைவி
மத்தியப்பிரதேசத்தில், ராஜபுத்திரர் பரம்பரையைச் சேர்ந்த ராஜ குடும்பம் ஒன்று வாழ்ந்துவருகிறது.

அந்தக் குடும்பத்தில் ஒருவரான ரூபேந்திர குமார் சிங்குக்கு இரண்டு மனைவிகள். ரூபேந்திர குமார், பாபா ராஜா என அழைக்கப்படுகிறார்.
ரூபேந்திர குமாரின் முதல் மனைவி யோகிதா சிங், இரண்டாவது மனைவி சுனிதா சிங் பரிஹார்.
ஏற்கனவே குடும்பத்துக்குள் நீண்ட காலமாக தகராறு இருந்துவந்த நிலையில், ரூபேந்திர குமார் தன் இரண்டாவது மனைவியுடன் அதிக நேரம் செலவிடுவதாக முதல் மனைவிக்கு வருத்தம் இருந்துவந்துள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமையன்று தன் சகோதரர் மற்றும் மகனுடன் தன் கணவர் வாழும் கோட்டைக்கு வந்துள்ளார் யோகிதா.
அப்போது, குடும்ப உறுப்பினர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும், ரூபேந்திர குமார் யோகிதாவை வெளியே தள்ளி கதவை அடைத்ததாகவும் கூறப்படுகிறது.
யோகிதா வீட்டை விட்டு வெளியேற மறுத்ததால், ரூபேந்திர குமாரின் இரண்டாவது மனைவியாகிய சுனிதா, துப்பாக்கியை எடுத்து யோகிதாவை நோக்கி சரமாரியாக சுட்டதாக அவரது தாய் பொலிசாரிடம் கூறியுள்ளார்.
சுனிதா சுட்டதில், ஒரு குண்டு யோகிதா வயிற்றில் பாய, அவர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சை மூலம் அந்த குண்டு அகற்றப்பட்டுள்ளது. அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து யோகிதாவை துப்பாக்கியால் சுட்ட சுனிதாவை பொலிசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்த உரிமம் பெற்ற துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |