குடியுரிமையால் பணிநீக்கம் செய்யப்பட்ட இலங்கை தமிழர் - சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
இந்தியர் இல்லை என்பதால் பணிநீக்கம் செய்யப்பட்ட இலங்கை தமிழருக்கு வேலை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்ட இலங்கை தமிழர்
ஜி.திருகல்யாணமலர் என்பவர் 1990 ஆம் ஆண்டில் குழந்தையாக இருந்த போது, இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து இந்தியாவிற்கு வந்தார்.

தமிழ்நாட்டில் வசித்து வந்த அவர், 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட SBI ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, அதிகாரி (சந்தைப்படுத்தல் மற்றும் மீட்பு - கிராமப்புறம்) பதவிக்கு விண்ணப்பித்திருந்தார்.
5 மே 2008 அன்று SBI வங்கியில் பணிக்கு சேர்ந்தார். 14 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், இந்திய குடிமக்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்களை கோரியதாக கூறிய SBI நிர்வாகம், திருகல்யாணமலரை பணிநீக்கம் செய்தது.
பணியில் சேரும்போது விண்ணப்பத்தில் குடியுரிமை தொடர்பாக எந்த விபரங்களும் கேட்கப்படவில்லை எனக்கூறி, இந்தபணிநீக்கத்தை எதிர்த்து திருகல்யாணமலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், தனது தாத்தா மற்றும் பாட்டி இந்தியாவில் பிறந்து இலங்கைக்கு புலம்பெயர்நதவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹேமந்த் சந்தன்கவுடர், "இந்திய அரசியலமைப்பின் பிரிவு 16 மற்றும் 19 இன் கீழ் குடிமக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் தவிர, இந்திய குடிமக்களுக்குக் கிடைக்கும் அனைத்து சலுகைகளும் இந்தியாவிற்கு புலம்பெயர்ந்தோருக்கு வழங்கப்பட வேண்டும்.

மேலும், மனுதாரர் ஒரு இந்தியரை திருமணம் செய்து 2 குழந்தைகளைப் பெற்றிருக்கும் நிலையில்,17 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிநீக்கம் செய்யப்பட்டால், ஈடுசெய்ய முடியாத இழப்பு மற்றும் கடுமையான கஷ்டங்களுக்கு ஆளாக நேரிடும்.
அத்தகைய பணிநீக்கம் அவரது வாழ்வாதாரத்தை இழப்பது மட்டுமல்லாமல், அவரது குழந்தைகளின் நலன் மற்றும் எதிர்காலத்தையும் மோசமாகப் பாதிக்கும்" எனக்கூறி அவரின் பணிநீக்கத்தை ரத்து செய்துள்ளார்.
இந்த தீர்ப்பு, SBI போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பாகுபாட்டை எதிர்கொள்ளும் புலம்பெயர்ந்தோருக்கான நீதித்துறை தீர்வுகளுக்கான அணுகலை விரிவுபடுத்தக்கூடும். மேலும், இந்தியாவில் வேலை செய்வதற்கானஅவர்களின் சட்டப்பூர்வ உரிமையை எடுத்துக்காட்டுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |