நகை கொள்ளைக்கும், மீனாட்சிக்கும் என்ன சம்பந்தம்? வாய்திறந்த நிஷாந்த்
Madurai Tanishq Robbery: மதுரை நகைக்கடை கொள்ளைக்கும், மீனாட்சிக்கும் என்ன தொடர்பு என்பதை நிஷாந்த் கூறியுள்ளதை குறித்து தெரிந்து கொள்வோம்.
மதுரை நகை கொள்ளை
மதுரை காளாவாசல் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் கடந்த 12ம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிகாலை சுமார் 3 மணிக்கு அரங்கேறிய கொள்ளையில் 11.384 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
போலிசார் சம்பவ இடத்தில் சிசிடிவி காட்சியினை சோதனை செய்த போது, ஒரு மாதமாக இளைஞர் ஒருவர் பல கெட்டப்பில் வந்து நோட்டமிட்டது தெரியவந்துள்ளது. ஆனால் கையில் இருந்த டாட்டூ இளைஞரைக் காட்டி கொடுத்தது.
இந்நிலையில் மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த சுரேஷ் மகன் நிஷாந்த்(25) கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதைக் கண்டுபிடித்த போலிசார், அவர் தலைமறைவாகி இருந்த நிலையில், நிஷாந்தின் தந்தை சுரேஷைக் கைது செய்தனர்.
மேலும் நிஷாந்தின் காதலியும், இன்ஸ்டா பிரபலமுமான மீனாட்சியும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மாடக்குளம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட நகைகளையும் மீனாட்சி உதவியால் மீட்டனர்.
பின்பு நிஷாந்த்தும் பேருந்து ஓட்டுநர் மூலமாக கைது செய்யப்பட்டு, நவம்பர் 1ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்ட நிலையில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனாட்சி குறித்து நிஷாந்த் கூறியது என்ன?
இந்நிலையில் நேற்றைய தினம் மீண்டும் மாவட்ட முதலாவது விரைவு நீதித்துரை நடுவர் நீதிமன்றத்தில் நிஷாந்த் ஆஜர்படுத்தப்பட்ட போது, தனது தந்தைக்கும், மீனாட்சிக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட நீதிபதி, கொள்ளை வழக்கில் யாருக்கு தொடர்பு என்பதை இப்போது பேசக்கூடாது என்றும் போலிஸ் காவல் குறித்த மனு மீதான விசாரணையே தற்போது நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.
காவல்துறை தரப்பில், நிஷாந்த் சுயநினைவுடன் பல நாட்கள் திட்டமிட்டு இந்த சம்பவத்தினை செய்துள்ளார், ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டுள்ளனர். அப்பொழுது ஒருநாள் மட்டும் நிஷாந்தை காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நிஷாந்தை துன்புறுத்தவோ, அவரது வழக்கறிஞரை சந்திக்க அனுமதி மறுக்கவோ கூடாது என்று நிபந்தனையுடன் அனுமதி அளித்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், நிஷாந்தை விசாரணை முடித்து சிறைக்கு அழைத்து செல்ல போலிசார் வேனில் ஏற்றிய போது, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். நிஷாந்த் ப்ரொ எதாவது சொல்லனுமா? என்று கேட்டனர்.
அதற்கு நிஷாந்த் மீனாட்சிக்கு இந்த சம்பவத்தில் எந்தவித தொடர்பு இல்லை என்று கூறினார். உடனே அருகிலிருந்து காவலர் அவரை பேசவிடாமல் இழுத்து தனது பக்கம் வைத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |