நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு: 82 வயது தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற மகன்
சொத்து தொடர்பான நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு 82 வயது தந்தையை மகன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை மகன் இடையே சொத்து தகராறு
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற நீர்வளத்துறை பணியாளரான 82 வயது ஜாபர் கமருதீன் சையத் படேலுக்கும், மருத்துவ பிரதிநிதியாக பணிபுரிந்து வரும் அவரது மகன் அப்துல் ரஹ்மானுக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக சொத்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
மகனின் வன்முறையாக நடவடிக்கைகள் காரணமாக மகனின் வீட்டிலிருந்து வெளியேறி புனேவில் உள்ள தனது மகள் வீட்டில் தந்தை ஜாபர் கமருதீன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் சொத்து தொடர்பான நீதிமன்ற வழக்கு தந்தைக்கு சாதகமாக வந்ததுடன், மகன் வீட்டை விட்டு விரைவாக வெளியேறி சொத்தை முழுவதுமாக தந்தையிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
தந்தையை கொன்ற மகன்
நீதிமன்ற உத்தரவை பெற்றுக் கொண்டு ஆட்டோவில் மகளுடன் தந்தை ஜாபர் கமருதீன் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது ஆட்டோவை மறித்த மகன் அப்துல் ரஹ்மான், தந்தை ஜாபர் கமருதீனை வெளியே இழுத்து போட்டு கத்தியால் குத்தி கொன்றுள்ளார்.
தாக்குதலை தடுக்க முயன்ற ஜாபர் கமருதீனின் மகளும் படுகாயமடைந்தார்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உடனடியாக மகன் அப்துல் ரஹ்மானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |