ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மரணம்.. மறுபிறவிக்காக தற்கொலை அல்ல! கொல்லப்பட்டது அம்பலம்
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் வீட்டில் இறந்து கிடந்த சம்பவத்தில் அதிரடி திருப்பமாக அவர்கள் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தின் மஹிசால் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் போபத் வன்மோர் மற்றும் மானிக் வன்மோர். இவர்கள் தங்கள் தாயார், மனைவி, நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.
இதில் போபத் வன்மோர் ஆசிரியராகவும், மானிக் வன்மோர் கால்நடை மருத்துவராகவும் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், இந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேரும் கடந்த 20ஆம் திகதி வீட்டில் உயிரிழந்து கிடந்தனர்.
இந்த குடும்பத்தினர் பலரிடம் கடன் வாங்கியிருந்த நிலையில் அதன் காரணமாக தற்கொலை செய்தார்களா அல்லது டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மீண்டும் உயிர்பெறலாம் என்ற மூடநம்பிக்கையில் இறந்தது போன்ற காரணத்தால் தற்கொலை செய்தார்களா என விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த குடும்பத்தினருடன் தற்கொலை செய்யும் முயற்சியை கையில் எடுத்ததாகவும் கூறி 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார் இதுதொடர்பாக 13 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரும் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மந்திரவாதியான தீரஜ் சுராவேஸ் மற்றும் அவரது டிரைவர் அப்பாஸ் முகமது அலி பகவான் ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்தனர்.
அதில் அப்பாஸ் இறந்த குடும்பத்தினரிடம் மறைக்கப்பட்ட இடத்தில் புதையல் இருப்பதாக கூறி, அதனை கண்டுபிடிக்க ரூ.1 கோடி வாங்கியுள்ளார். ஆனால் சொன்னபடி புதையலை கண்டுபிடிக்காததால் வாங்கிய பணத்தை குடும்பத்தினர் திரும்ப கேட்டுள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த அப்பாஸ் முகமது அலி பகவான் கடந்த ஜூன் 19 ஆம் திகதி புதையலைக் கண்டுபிடிக்க சில சடங்குகளைச் செய்ய வேண்டும் என கூறி ஒவ்வொருவராக மாடிக்கு வரவழைத்து விஷம் கலந்த தேநீரை கொடுத்து கொலை செய்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைதான இருவரும் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 (கொலைக்கான தண்டனை) செயல்படுத்தப்படும் என தெரியவந்துள்ளது.