'என்ன சட்டம் போட்டாலும் தடுப்பூசி போடமாட்டோம்' ஜேர்மன் மக்கள் பிடிவாதம்! ஆய்வில் அதிர்ச்சி தகவல்
ஜேர்மனியில் இதுவரை தடுப்பூசி போடப்படாதவர்களில் பெரும்பாலானோர், எந்த சூழலிலும் தடுப்பூசி போட மறுப்பு தெரிவித்துள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிந்தாலும் சரி, உணவகங்கள் மற்றும் திரையரங்குகள் போன்ற பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்தாலும் சரி, ஜேர்மனியில் தடுப்பூசி போடாதவர்களில் பெரும்பாலானோர் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளப் போவதாக இல்லை என பிடிவாதமாக இருக்கிறார்கள்.
பெரும்பாலான ஜேர்மன் நகரங்களில், உணவகத்தில் சாப்பிடுவது அல்லது சினிமாவுக்குச் செல்வது போன்ற உட்புறச் செயல்கலில் ஈடுபட அல்லது ரசிக்க, அவர்கள் சமீபத்தில் கோவிட்-19 நோயிலிருந்து மீண்டிருக்க வேண்டும் அல்லது தடுப்பூசி போட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஒரு புதிய கணக்கெடுப்பின்படி, தடுப்பூசி போடப்படாத பெரியவர்களில் பெரும்பாலோர் இன்னும் அப்படியே இருக்க விரும்புகிறார்கள் என தெரியவந்துள்ளது.
ஜேர்மனியின் சுகாதார அமைச்சகத்தின் சார்பாக Forsa என்ற ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில்:
- தடுப்பூசி போடப்படாதவர்களில் 65% பேர் அடுத்த இரண்டு மாதங்களுக்கு கோவிட்-19 தடுப்பூசியை பெறுவதற்கு எந்த யோசனையும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
- மேலும் 23% பேர் "அநேகமாக" போட மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
- வெறும் 2% பேர் மட்டுமே தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம், ஆனால் இன்னும் போட முடியவில்லை என தெரிவித்துள்ளது.
ஜேர்மனியின் அதிகமான மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகள் பெருகிய போதிலும், தடுப்பூசி போடப்படாதவர்களுக்கு அது குறித்து அதிக அக்கறை காட்டவில்லை என்பதையும் Forsa கண்டறிந்தது.
தடுப்பூசியை மறுப்பதற்கான காரணங்கள் என்ன?
சிலர் தாங்கள் தடுப்பூசி போட வற்புறுத்தப்படுவதாக உணர்கின்றார். இந்த தடுப்பூசிகள் கர்ப்பமாக உள்ளவர்களுக்கு அல்லது கருத்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு பாதுகாப்பானதா என்பது பற்றிய தெளிவின்மை ஆகியவை தடுப்பூசியை மறுப்பதற்கான காரணங்களில் அடங்கும்.
தடுப்பூசி போடப்படாதவர்களிடையே மிகப்பெரிய கவலை, "நீண்ட கால" ஆய்வுகளின் பற்றாக்குறை என கூறுகின்றனர். இதனால் சாத்தியமான பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஞ்சுகின்றனர்.
கடந்த 18 மாதங்களில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான டோஸ்கள் பாதுகாப்பாக நிர்வகிக்கப்பட்டுள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வின்படி , ஜேர்மனி இன்னும் ஐரோப்பாவில் மிகக் குறைந்த தடுப்பூசி விகிதங்களில் ஒன்றாக உள்ளது.
தொற்று நோய்களுக்கான ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட்டின் (RKI) புள்ளிவிவரங்களின்படி, போர்ச்சுகல் (88%) அல்லது ஸ்பெயினுடன் (81%) ஒப்பிடும்போது, 66.5% ஜேர்மானியர்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.