கூட்டணி குறித்து கமல் ஹாசன் என்ன சொல்ல வருகிறார்? எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு
நடிகர் கமல் ஹாசன் கூட்டணி குறித்து இன்று அறிவிக்கப்படுவதாக கூறியிருந்த நிலையில் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அனைத்து கட்சிகளும் அரசியல் தொடர்பான வேலைகள், கூட்டணி குறித்து ஆலோசித்து வருகின்றன. இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
அவர், வரும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என தெரிவித்திருந்தார். மேலும், "கூட்டணி தொடர்பாக இன்னும் இரண்டு நாட்களில் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன்" என்று கூறியிருந்தார்.
ட்விட்டர் பதிவு
இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "மக்கள் நீதி மய்யம் இன்று ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இருபெரும் தேர்தல்களை எதிர்கொண்டோம்.
பண பலமோ, ஊடக பலமோ, முன் அனுபவமோ சிறிதும் இன்றி மக்களைச் சந்தித்தோம். கவனம் ஈர்க்கும் வகையில் வாக்குகளைப் பெற்றோம். மக்களுக்கு அவர்களுடைய கடமையை நினைவுறுத்துவதும், தலைமைக்குத் தயார்படுத்துவதும் தேர்தல் வெற்றிகளை விட முக்கியமானது.
மக்கள் நீதி மய்யம் இன்று ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
— Kamal Haasan (@ikamalhaasan) February 21, 2024
கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இருபெரும் தேர்தல்களை எதிர்கொண்டோம். பண பலமோ, ஊடக பலமோ, முன் அனுபவமோ சிறிதும் இன்றி மக்களைச் சந்தித்தோம். கவனம் ஈர்க்கும் வகையில் வாக்குகளைப் பெற்றோம்.
மக்களுக்கு அவர்களுடைய…
ஜனநாயகத் தேரை நாம் அனைவருமே சேர்ந்துதான் இழுக்கவேண்டும் என்கிற உணர்வை ஊட்டுவதே அவசியம் மிக்க அரசியல் செயல்பாடு. மக்கள் நீதி மய்யத்தைப் போன்ற ஜனநாயக சக்திகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.
சாதி மதச் சழக்குகள் இருக்கும்வரை, வடக்கு தெற்கு பேதம் வாழும் வரை, ஊழலும் சீர்கேடுகளும் தொடரும் வரை நமது போராட்ட செயல்பாடுகள் ஓயாது. உயர்த்திய கொடிகள் தாழாது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |