வாழ்வில் ஆண் துணைக்காக திருமண பேப்பரில் கையெழுத்துப் போட வேணாம்னு அன்று சொன்னீர்களே? புதுப்பெண் மலாலா மீது எழுந்த விமர்சனம்
உலகபுகழ்பெற்ற மலாலாவுக்கு பிரித்தானியாவில் நேற்று முன் தினம் திருமணம் நடந்த நிலையில், சமீபத்தில் திருமணம் குறித்து சர்ச்சையான கருத்தை அவர் கூறியதற்கு தற்போது நெட்டிசன்கள் எதிர்வினை ஆற்றியுள்ளனர்.
பாகிஸ்தானில், பெண் குழந்தைகள் கல்விக்காக போராடிய மலாலா யூசப்சை, தாலிபான் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தாலிபான் பயங்கரவாதிகள், 2012ல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், மலாலா படுகாயம்அடைந்தார். தலையில் குண்டு பாய்ந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவ மனை யில் அனுமதிக்கப்பட்ட மலாலா, தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார்.
இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்குப் பின், மலாலா தன் குடும்பத்துடன் பிரித்தானியாவின் பிர்மிங்காம் பகுதிக்கு குடிபெயர்ந்தார்.
2014ம் ஆண்டு, மலாலாவின் 17வது வயதில், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சிறிய வயதில் நோபல் பரிசை வாங்கியவர் என்ற பெருமையை அவர் பெற்றார். பின், லண்டனில் படித்து வந்த மலாலா, கடந்த ஆண்டு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
இந்நிலையில், பிர்மிங்காம் வீட்டில் மலாலாவுக்கு திருமணம் நடந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மூத்த அதிகாரியான அசர் மாலிக் என்பவரை அவர் திருமணம் செய்துள்ளார்.
இந்த சூழலில் சில மாதங்களுக்கு முன்னர் மலாலா திருமணம் தொடர்பில் ஒரு சர்ச்சை கருத்தை கூறியிருந்தார்.
அதாவது, திருமணம் எதற்காக என புரியவில்லை, ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்? திருமணம் செய்து கொள்ளாமல் ஏன் அவர்கள் தம்பதியாக வாழமுடியாது? வாழ்க்கையில் ஆண் துணை வேண்டுமானால் அதற்கு திருமண பேப்பர்களில் கையெழுத்துப் போட வேண்டிய அவசியமில்லை என்று பேசியிருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும், முக்கியமாக பாகிஸ்தானில் கடும் கண்டனம் எழுந்தது. திருமணம் குறித்து அப்படியொரு கருத்தை கூறிவிட்டு தற்போது மலாலா திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் பலரும் அவரை டுவிட்டரில் விமர்சித்துள்ளனர்.
அன்னி அபாசி என்ற பெண்ணின் பதிவில், நிக்கா என்பது முக்கியமில்லை, அது வெறும் இரண்டு நபர்களுக்கு இடையேயான ஒரு வகையான ஒப்பந்தம் என்று கூறியவர் இவர் தானே? என பதிவிட்டுள்ளார்.
சல்மான் டுரானி என்பவரின் பதிவில், திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வது என்றால் என்ன? ஓகே வாழ்த்துக்கள் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
இதே போல பலரும் மலாலாவின் பழைய கருத்தை தற்போது விமர்சித்துள்ளனர்.