சிறுமிக்கு வலை விரித்த இந்திய மாணவர்: பொறி வைத்து பிடித்த லண்டன் அதிகாரிகள்
இந்தியாவின் கேரள மாநிலத்து மாணவர் ஒருவர் சிறார் துஸ்பிரயோக வழக்கில் பிரித்தானியாவில் கைதாகியுள்ளார்.
கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த 24 வயது மாணவரே குறித்த வழக்கில் லண்டன் பொலிசாரால் கைதானவர். குறித்த இளைஞர் சமூக ஊடகம் வாயிலாக அறிமுகமான 14 வயது சிறுமியிடம் உறவுக்கு கோரியுள்ளார்.
ஆனால், சிறார் துஸ்பிரயோகங்களை தடுக்க, பொலிசார் உருவாக்கிய பொலி சமூக ஊடக கணக்கு அது என குறித்த மாணவருக்கு தெரியாமல் போயுள்ளது.
அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி லண்டனில் உள்ள ஹொட்டல் ஒன்றிற்கு வரும் படி கட்டாயப்படுத்தியுள்ளார். இதன்படி, தாம் தங்கியிருந்த பகுதியில் இருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்திற்கு பின்னர் அந்த இளைஞர் குறிப்பிட்ட ஹொட்டலுக்கு சென்றுள்ளார்.
ஆனால், எதிர்பாராத வகையில், அந்த இளைஞரை பொலிசார் மற்றும் சிறார் பாதுகாப்பு அதிகாரிகள் குழு வரவேற்றுள்ளனர். விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமான நிலையில், சட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர் அவர் நாடுகடத்தப்படுவார் என்றே தெரிய வந்துள்ளது.
மேலும், பாலியல் உறவுக்கு ஆசைப்பட்டு தவறு செய்ததாக குறித்த இளைஞர் கெஞ்சியும், கைது நடவடிக்கையில் இருந்து விடுவிக்க முடியாது என பொலிசார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, பொலிசார் உருவாக்கியுள்ள இதுபோன்ற போலி சமூக ஊடக பக்கங்களில், மேலும் இரு சிறுமிகளுடன் குறித்த இளைஞர் தொடர்பில் இருந்ததும் அம்பலமானது.