ஸ்காட்லாந்தை கதறவிட்ட ஷோயப் மாலிக்! 5-வது வெற்றியை எதிர்நோக்கும் பாகிஸ்தான்
டி20 உலகக்கோப்பை தொடரில் ஸ்காட்லாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 189 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்12 சுற்றில், இன்று நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.
பாகிஸ்தான் அணி ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், ஸ்காட்லாந்து அணி விளையாடிய நான்கு போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது.
இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி பலமான பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை விட்டு விடைபெற ஆர்வம் காட்டும்.
ஷார்ஜா அரங்கத்தில் நடைப்பெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட தேர்வு செய்தது.
பாகிஸ்தானுக்கு முகமது ரிஸ்வானிடமிருந்து இந்த முறை நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. 15 ஓட்டங்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஃபகார் ஸமான் 8 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
விக்கெட்டுகள் விழுந்தபோதிலும் பாபர் அஸாம் பாட்னர்ஷிப்பை கட்டமைத்தார். ஆனால், முகமது ஹபீஸ் அதிரடி காட்டி ரன் ரேட்டை உயர்த்தினார். வந்த வேகத்தில் 19 பந்துகளுக்கு 31 ஓட்டங்கள் விளாசிய அவர் 15-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து, அஸாம் அதிரடி காட்டத் தொடங்கினார். அவர் 40-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். கடைசி நேரத்தில் அதிரடி காட்ட வேண்டிய நேரத்தில் அஸாம் ஆட்டமிழந்தார்.
ஆனால், அனுபவம் மிக்க ஷோயப் மாலிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு ஸ்காட்லாந்தை பந்தாடினார். 19-வது ஓவரில் 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டார் மாலிக்.
பின்னர் கடைசி ஓவர் சுழற்பந்துவீச்சாக அமைய அந்த ஓவரில் மட்டும் கடைசி 4 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரி அடித்தார் மாலிக்.
கடைசி சிக்ஸர் அடித்ததன் மூலம் 18-வது பந்தில் தனது அரைசதத்தை அவர் எட்டினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மாலிக் 1 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உள்பட மொத்தம் 54 ஓட்டங்கள் விளாசினார்.
இந்நிலையில், தொடரில் ஒரு பொட்டியிலாவது வெற்றி பெற்று நாடு திரும்பவேண்டும் என்ற முனைப்பில் ஸ்காட்லாந்து அணி துடுப்பாட தொடங்கியுள்ளது.