பெண்கள் இரவில் வெளியே வரக்கூடாது - பெண் முதல்வர் பேச்சால் சர்ச்சை
மாணவி வன்கொடுமை செய்யப்பட்டுள்ள பெண்கள் இரவில் வெளியே வரக்கூடாது என முதல்வர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவி வன்கொடுமை
நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் திகதி மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் பயிற்சி மருத்துவர் மருத்துவமனையில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அதேபோல் மீண்டும் மேற்கு வங்கத்தில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தின் பஸ்சிம் பர்தமான் மாவட்டத்தின், துர்காபூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், ஒடிசாவை சேர்ந்த 23 வயது பெண் 2 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து வந்துள்ளார்.
கடந்த அக்டோபர் 10 ஆம் திகதி, அவரது ஆண் நண்பர் உணவு சாப்பிடுவதற்காக இரவு 8 மணியளவில் அவரை விடுதியில் இருந்து வெளியே அழைத்து சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த 3 ஆண்கள் அந்த நபரை அடித்து விரட்டி விட்டு, அந்த மாணவியை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பின்னர் அந்த 3 ஆண்களும் தப்பியோடியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவி விடுதிக்கு வந்து சக மாணவிகளிடம் இதை தெரிவித்த பின்னர், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும், இது குறித்து மாணவியின் பெற்றோரிடம் தெரிவிக்க, அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து, அப்பு பவுரி (21), ஃபிர்தௌஸ் ஷேக் (23), மற்றும் ஷேக் ரியாசுதீன் (32) ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர்.
மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மாணவர்கள், மாதர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முதல்வர் சர்ச்சை பேச்சு
இந்நிலையில், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேசிய அவர், "ஒடிசா கடற்கரையில் 3 வாரத்திற்கு முன்பு 3 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். ஒடிசா அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?
தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி அதிகாலை 12.30 மணிக்கு எப்படி வெளியே வந்தார்? இந்தச் சம்பவம் வனப்பகுதியில் நடந்திருப்பதாக தற்போதைக்கு தெரியவருகிறது.
என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் எனக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கல்லூரிகள் தங்கள் மாணவர்கள் மீது அக்கறை கொள்ள வேண்டும், குறிப்பாக பெண்கள் மீது. பெண்கள் இரவு நேரங்களில் கல்லூரியை விட்டு வெளியே செல்ல கூடாது. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என பேசியுள்ளார்.
பெண்கள் இரவில் வெளியே வரக்கூடாது என முதல்வரே பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் அவர் இரவு 8 மணிக்கு வெளியே சென்றதை நள்ளிரவு 12;30 மணிக்கு சென்றதாக தவறான தகவலை வெளியிட்டுள்ளார்.
தனது பேச்சுக்கு கண்டனம் எழுந்துள்ள நிலையில், நான் பேசியதை ஊடகங்கள் தவறாக திரித்துள்ளன. இதை வைத்து எதிர்க்கட்சிகள் மலிவான அரசியல் செய்கிறது. குற்றவாளிகள் தப்பிக்க முடியாது" என விளக்கமளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |