இந்திய வம்சாவளி ஜோஹ்ரான் மம்தானி நியூயார்க் மேயராக தெரிவு
செவ்வாயன்று நடந்த நியூயார்க் நகர மேயர் தேர்தலில் 34 வயதான ஜனநாயக சோசலிஸ்டான ஜோஹ்ரான் மம்தானி வரலாறு படைத்துள்ளார்.
முதல் முஸ்லிம் மேயராக
அதிகம் அறியப்படாத ஒரு மாகாண சபை உறுப்பினரிலிருந்து நாட்டின் மிகவும் புலப்படும் ஜனநாயகக் கட்சி பிரமுகர்களில் ஒருவராக ஜோஹ்ரான் மம்தானி உயர்ந்துள்ளார்.

அமெரிக்காவின் மிகப்பெரிய நகரத்தின் முதல் முஸ்லிம் மேயராக மம்தானி பொறுப்பேற்கவிருக்கிறார். மட்டுமின்றி ஜனநாயகக் கட்சியின் முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவை தோற்கடித்து வரலாறு படைத்துள்ளார்.
மம்தானிக்கு எதிராக பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் தீவிரமான பரப்புரைகளில் ஈடுபட்டிருந்தனர்.
அத்துடன், மம்தானி வெற்றி பெற்றால் நியூயார்க் நகருக்கான பொருளாதார உதவிகள் நிறுத்தப்படும் என்றும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார். மட்டுமின்றி, நியூயார்க்கில் வசிக்கும் யூதர்கள் கண்டிப்பாக மம்தானிக்கு வாக்களிக்க வாய்ப்பில்லை என்றும் ட்ரம்ப் கூறியிருந்தார்.
ஆனால், நியூயார்க் நகரில், முன்கூட்டியே வாக்களிப்பது உட்பட 2 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பதிவானதாக தேர்தல் வாரியம் தெரிவித்துள்ளது. 1969 ஆம் ஆண்டிற்கு பிறகு இதுவே முதல் முறை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

நியூயார்க்கில், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகையை முடக்குவது மற்றும் நகரத்தின் பேருந்துகளை இலவசமாக்குவது உள்ளிட்ட இடதுசாரிக் கொள்கைகளை மம்தானி முன்வைத்திருந்தார்.
தாயார் மீரா நாயர்
ஜோஹ்ரான் மம்தானி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், பிரபல திரைப்பட இயக்குநர் மீரா நாயர் மற்றும் மஹ்மூத் மம்தானி ஆகியோருக்கு உகாண்டாவின் கம்பாலாவில் பிறந்தவர்.
மஹ்மூத் மம்தானி, மும்பையில் பிறந்த ஒரு உகாண்டா கல்வியாளராவார். மம்தானியின் தந்தை இந்தியாவின் குஜராத்தில் வேர்களைக் கொண்ட கோஜா ட்வெல்வர் ஷியா சமூகத்தைச் சேர்ந்தவர்.

2025 ஆம் ஆண்டு நிலவரப்படி மம்தானியின் சொத்து மதிப்பு 200,000 முதல் 300,000 அமெரிக்க டொலர் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நியூயார்க் மாகாண சபை உறுப்பினராக அவரது ஆண்டு சம்பளம் சுமார் $142,000 ஆகும்.
மம்தானியின் தாயார் மீரா நாயர், மன்சூன் வெட்டிங் மற்றும் சலாம் பாம்பே போன்ற திரைப்படங்களால் பெயர் பெற்ற இந்திய-அமெரிக்க திரைப்பட இயக்குநர் ஆவார்.
பிப்ரவரி 2025ல் ஜோஹ்ரான் மம்தானி, சிரிய-அமெரிக்க கலைஞரான ராம துவாஜியை மணந்தார். இருவரும் 2021ல் ஒரு டேட்டிங் செயலி ஊடாக அறிமுகமாகி, 2024ல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |