லண்டனில் ஊசி மூலம் உணவில் மர்மப்பொருளை செலுத்தியவரின் அடையாளம் தெரியவந்தது!
லண்டனிலுள்ள சில பல்பொருள் அங்காடிகளில் ஒருவர் ஏதோ ஒரு மர்மப்பொருளை ஊசி மூலம் செலுத்தியதாக கைது செய்யப்பட்டார்.
அவர் Fulhamஐச் சேர்ந்த Leoaai Elghareeb (37) என தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு, சுமார் 7.40 மணியளவில், மேற்கு லண்டனில் ஒருவர் மக்களை மோசமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்ததாக பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டது.
விரைந்து வந்த பொலிசாருக்கு எதிர்பாராத செய்தி ஒன்று காத்திருந்தது. ஆம், அந்த நபர் லண்டனிலுள்ள Tesco, Waitrose மற்றும் Sainsbury பல்பொருள் அங்காடிகள் பலவற்றில் நுழைந்து, ஊசிகள் மூலம் உணவுப்பொருட்களில் மர்மப்பொருள் ஒன்றை செலுத்தியது தெரியவந்தது.
அவர் சந்தேகத்துக்குரிய வகையில் நடந்துகொண்டதாகவும், தான் வைத்திருந்த ஊசி போட பயன்படும் சிரிஞ்சுகளை தெருவில் வீசியதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
பின்னர் விசாரணையில் அவர் மூன்று பல்பொருள் அங்காடிகளில் நுழைந்து, ஊசிகள் மூலம் உணவுப்பொருட்களில் மர்மப்பொருள் ஒன்றை செலுத்தியது தெரியவந்துள்ளது.
உடனடியாக பொலிசார் அவரைக் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள்.
இந்த தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்ட பல்பொருள் அங்காடிகள் உடனடியாக மூடப்பட்டுள்ளன.
அதிகாரிகளும் வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள்.
அதன்படி, அந்த பல்பொருள் அங்காடிகளில் குறிப்பிட்ட நேரத்தில் எதையாவது வாங்கியிருந்தால், அவற்றை குப்பையில் வீசி விடுமாறு அவர்கள் மக்களைக் கேட்டுக்கொண்டார்கள்.
என்னென்ன உணவுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன என்பது சரியாக தெரியாவிட்டாலும், பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் மைக்ரோவேவ் அவனில் வைத்து தயார் செய்யப்படும் உணவுகள் ஆகியவை பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பல்பொருள் அங்காடிகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
உணவுப்பொருளை சேதப்படுத்தியதாக Elghareeb மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று அவர் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.