லண்டனில் அடுத்தடுத்து ஒரே மாதிரி நடந்த இரண்டு கொலைகள்: சந்தேகநபர் கைது
லண்டனில் கடந்த வாரம் ஒரே இரவில் நடந்த இரட்டை கொலை தொடர்பில் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்தனர்.
லண்டனில் ஆகஸ்ட் 20-ஆம் திகதி இரவு வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து 2 கொலைகள் ஒரே மாதிரி நடந்தது. இரண்டு கொலைகளிலும் பாதிக்கப்பட்டவர் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்ததால், இதனை செய்தது ஒரே நபராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்தனர்.
வெஸ்ட்மினிஸ்டர் பகுதியில், ஆஷ்பிரிட்ஜ் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில், 45 வயது மிக்க ஒரு பெண் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையில் ஈடுபட்ட நேரத்தில், வெள்ளிக்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் பொலிஸாருக்கு மற்றோரு அழைப்பு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதே பகுதியில், அரை மைல் தொலைவில் இருக்கும் Jerome Crescent எனும் இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 59 வயதுடைய ஒரு ஆண் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
விசாரணை நடத்தப்பட்டதில், இந்த இரண்டு கொலைகளையும் Lee Peacock எனும் 49 வயது நபர் செய்து இருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்தனர்.
அதனைத் தொடர்ந்து, லீ பீகாக் இடம் பெற்றுள்ள ரயில் நிலைய சிசிடிவி காட்சி ஒன்றை லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதனைப் பார்க்கும் பொது மக்கள், லீ பீகாக் பற்றிய தகவல் அறிந்தால் உடனடியாக காவல் துறைக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க உதவும் வகையில் துப்பு கொடுப்பவர்களுக்கு 20,000 பவுண்டுகள் சன்மானமாக அளிக்கப்படும் என புலனாய்வாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், Lee Peacock-ஐ மெட்ரோபொலிட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரை லண்டன் மருத்துவமனையில் வியாழக்கிழமை பிற்பகல் கைது செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.