10 வயது மகனை கொன்ற தந்தை: சடலத்தின் அருகே படுத்துறங்கிய கொடூரம்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தந்தையே தனது 10 வயது மகனை கொலை செய்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
குஜராத்தின் வின்சியா கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ்(வயது 37), விவசாயம் செய்து வருகிறார்.
அத்துடன் உள்ளூர் தெய்வங்களை தன்னுள் வாங்கி ஆவிகளை கட்டுப்படுத்தும் பாரம்பரிய தொழிலை செய்து வந்ததாக தெரிகிறது, இவரது தந்தையும் இதையே செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது 10 வயது மகனான கரணை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெற்ற பிள்ளையை கொன்றது ஏன்?
நவம்பர் 1ம் தேதி மாலை 7 மணியளவில் உள்ளூர் தெய்வத்தின் கோவிலிலும் நரேஷின் வீட்டிற்கு அருகிலும் அலறல் சத்தம் கேட்டதாக போலிசாருக்கு புகார் வந்துள்ளது.

9 மணியளவில் போலிசார் மற்றும் நரேஷின் குடும்பத்தினர் வந்து பார்த்த போது ஒரு கட்டிலில் ரத்த வெள்ளத்தில் கரணும், மற்றொரு கட்டிலில் நரேஷ் இருந்துள்ளனர்.
உடனடியான கரணின் சடலத்தை கைப்பற்றிய போலிசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல்
நரேஷிடம் விசாரணை நடத்தியதில், தனக்கு பின் பாரம்பரிய ஆவிகளை கட்டுப்படுத்தும் தொழிலை தன் மகன் பின்தொடரக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.
மகனின் காலை பிடித்துக்கொண்டு உள்ளூர் தெய்வத்தின் பீடத்தில் அடித்துள்ளார், குச்சியால் தாக்கியதில் கரண் உயிரிழந்துள்ளான்.
நரேஷின் மனைவி சிறு தகராறு காரணமாக அக்டோபர் மாதமே அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே நரேஷை போலிசார் கைது செய்தனர், மனநலம் ஏதும் பாதிக்கப்பட்டுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.