தோட்டத்தை சுத்தம் செய்ய கருவிகளுடன் சென்ற நபர்: சுற்றி வளைத்த ஆயுதம் தாங்கிய பொலிசார்
தோட்டத்தில் எக்கச்சக்கமாக வளர்ந்து கிடந்த செடிகளை சுத்தம் செய்ய, அதற்கான கருவிகளுடன் சென்ற பிரித்தானியரை, ஆயுதம் தாங்கிய பொலிசார் சுற்றி வளைத்து கைது செய்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
தோட்டக் கருவிகளுடன் சென்ற நபரை சுற்றி வளைத்த பொலிசார்
இங்கிலாந்தின் மான்செஸ்டரில் வாழ்ந்துவரும் சாமுவேல் (Samuel Rowe, 35) தனது தோட்டத்தை சுத்தம் செய்வதற்காக கருவிகள் வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்திருக்கிறார்.
அப்போது, திடீரென சாமுவேலை சுற்றி வளைத்த ஆயுதம் தாங்கிய பொலிசார், அவரை சுவருடன் வைத்து அழுத்தி, அவரது கைகளில் விலங்கிட்டு கைது செய்து பொலிஸ் வேனில் அழைத்துச் சென்றுள்ளார்கள்.
பொலிஸ் நிலையத்தில் வைத்து, நீ இந்த ஆயுதங்களை வைத்து தாக்குதல் ஏதாவது நடத்த திட்டம் வைத்திருக்கிறாயா, உனக்கு ஆட்டிஸக் குறைபாடு இருக்கிறதா, நீ ராணுவத்தில் இருந்தாயா என்றெல்லாம் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார்கள்.
தான் தன் தோட்டத்தை சுத்தம் செய்ய வாங்கிய கருவிகள் அவை என கூறியும் கேட்காத பொலிசார், நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு எச்சரிக்கை விடுத்து சாமுவேலை விடுவித்துள்ளார்கள்.
இந்நிலையில், தான் கைது செய்யப்பட்டது மற்றும் எச்சரித்து விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுவருகிறார் சாமுவேல்.
ஒருவர் ஆயுதங்களுடனும் காக்கி நிற கால்சட்டையுடனும் நடமாடுவதாக தங்களுக்கு புகார் வந்ததாகவும், அதனால் தாங்கள் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கிறார்கள் பொலிசார்.
ஆனால், பொலிசாரின் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் தனது வேலைவாய்ப்புகளை பாதிக்கக்கூடும் என தான் கவலைப்படுவதாகத் தெரிவிக்கிறார் சாமுவேல்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |