தடை செய்யப்பட்ட அந்தமான் தீவுப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த வெளிநாட்டு இளைஞர்
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தடைசெய்யப்பட்ட பூர்வகுடி பகுதியான வடக்கு சென்டினல் தீவிற்குள் நுழைந்ததாக அமெரிக்க நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு சென்டினல் தீவு
எந்த அனுமதியும் இல்லாமல் வடக்கு சென்டினல் தீவுக்குள் நுழைந்ததாகக் குறிப்பிட்டு 24 வயதேயான Mykhailo Viktorovych Polyakov என்பவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞர் மார்ச் 26 அன்று போர்ட் பிளேயருக்கு வந்து, குர்மா தேரா கடற்கரையிலிருந்து வடக்கு சென்டினல் தீவுக்குச் சென்றுள்ளார். மார்ச் 29 ஆம் திகதி அதிகாலை 1 மணியளவில் குர்மா தேரா கடற்கரையிலிருந்து படகில் புறப்பட்ட அவர், சென்டினல் மக்களுக்கு காணிக்கையாக ஒரு தேங்காய் மற்றும் ஒரு கோலா டப்பாவை எடுத்துச் சென்றார் என்று பொலிசார் தெரிவித்தனர்.
பகல் 10 மணிக்கு வடக்கு சென்டினல் தீவின் வடகிழக்கு கரையை அடைந்த பாலியாகோவ், தொலைநோக்கியைப் பயன்படுத்தி, அந்தப் பகுதியை ஆய்வு செய்துள்ளார், ஆனால் அங்கு எந்த மக்களையும் காணவில்லை.
சுமார் ஒரு மணிநேரம் காத்திருந்து, அங்குள்ள மக்களை ஈர்க்க முன்னெடுத்த செயல்களும் பலனளிக்கவில்லை. மதியம் 1 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, இரவு 7 மணிக்கு குர்மா தேரா கடற்கரைக்கு திரும்பியுள்ளார்.
அத்துமீறி நுழைந்துள்ளதாக
இந்த நிலையில் உள்ளூர் மீனவர்களால் அடையாளம் காணப்பட்டு, பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் போர்ட் பிளேயருக்கு வந்துள்ள இவர் வடக்கு சென்டினல் தீவிற்கு புறப்பட்ட தயாரான போது ஹொட்டல் ஊழியர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் இந்தியாவிற்கு திரும்பிய இவர் பாரதாங் தீவுகளுக்குச் சென்று, ஜராவா பூர்வகுடி மக்களை சட்டவிரோதமாக வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது தடை செய்யப்பட்ட பகுதிகளில் அத்துமீறி நுழைந்துள்ளதாக குறிப்பிட்டு வழக்குப் பதியப்பட்டுள்ளது. கடைசியாக 2018ல் அமெரிக்க மிஷனரி ஜான் சாவ் என்பவர் சென்டினல் மக்களை தொடர்புகொள்ள முயன்று, அந்த மக்களால் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |