பிரான்சில் பிரித்தானியர் கொல்லப்பட்ட விவகாரம்: ஒருவர் கைது
Man arrested over death of British pensioner in French village: பிரெஞ்சு கிராமம் ஒன்றில் பிரித்தானிய முதியவர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்மேற்கு பிரான்சிலுள்ள Gers என்னும் கிராமத்தில் வாழ்ந்துவந்த பிரித்தானிய முதியவர் ஒருவர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்நிலையில், அந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்சில் கொல்லப்பட்ட பிரித்தானியர்
ஜான் ஆக்னர் (85) என்னும் பிரித்தானியர் தன் மனைவியுடன் 20 ஆண்டுகளாக பிரான்சில் வாழ்ந்துவந்தார். அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, ஆக்னர் மட்டும் தன் வீட்டிலிருந்துள்ளார்.

இந்நிலையில், சனிக்கிழமையன்று தன் வீட்டினருகே உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார் ஆக்னர். அவர் கொடூரமாக தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட முதியவர்
இதற்கிடையில், சனிக்கிழமை காலை, Mont-de-Marsan என்னுமிடத்தில் அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றை பொலிசார் நிறுத்த முயன்றுள்ளார்கள்.
அந்தக் கார் நிற்காமல் செல்லவே, அதைத் துரத்திச் சென்றுள்ளனர் பொலிசார். சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு காரை ஓரிடத்தில் நிறுத்திய அந்தக் காரிலிருந்தவர்கள், அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

அவர்களில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர் ஒரு 60 வயது முதியவர். காரிலிருந்த மற்ற மூன்று பேரும் தப்பியோடிவிட்டனர்.
அந்தக் கார் யாருடையது என விசாரிக்கும்போது, அது ஜான் ஆக்னர் என்பவருடையது என தெரியவந்துள்ளது.
அவரது வீட்டுக்கு பொலிசார் வந்தபோதுதான், அவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுக் கிடந்தது தெரியவந்துள்ளது.
அவர் எதனால் கொல்லப்பட்டார், அவரது கொலைக்கும் கார் திருடர்களுக்கு என்ன தொடர்பு என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.