பிரித்தானியாவில் 87 வயது முதியவருக்கு நேர்ந்த கொடூரம்: சிக்கிய நபர்
பிரித்தானியாவின் வடக்கு லண்டனில் 87 வயது முதியவரை கொலை செய்ததாக, 58 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
87 வயது முதியவர்
வடக்கு லண்டனின் மேனர் ஹவுஸில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 87 வயது முதியவர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானார். அவரது வீட்டில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியிருந்ததும் பொலிஸாருக்கு தெரிய வந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த லண்டன் ஆம்புலன்ஸ் சேவையைச் சேர்ந்த துணை மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட முதியவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அன்று இறந்தார்.
இதுதொடர்பில் ஹார்ன்சியைச் சேர்ந்த பீட்டர் அகஸ்டின் (58) என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் வில்லெஸ்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதற்காக காவலில் வைக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து பேசிய தலைமை ஆய்வாளர் மார்க் ரோஜர்ஸ், இதுதொடர்பாக அதிகாரிகள் வேறு யாரையும் தேடவில்லை. இருப்பினும், இது ஒரு விரைவான விசாரணை.
அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அல்லது என்ன நடந்தது என்பதைக் கண்டவர்கள் தயவுசெய்து காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
சோகமான முறையில்
மேலும், உள்ளூர் காவல்துறைக்கு தலைமை தாங்கும் உதவி தலைமை கண்காணிப்பாளர் பிரிட்டானி கிளார்க், "நடந்த சம்பவத்தால் பலர் மிகவும் கவலைப்படுவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும், மேலும் ஒரு நபர் காவலில் இருக்கும்போது உள்ளூர் ரோந்துப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
உங்களுக்கு ஏதேனும் இதைப் பற்றி தெரிந்திருந்தால் அதிகாரிகளிடம் கூறுங்கள். ஒரு நபர் சோகமான முறையில் தனது உயிரை இழந்துள்ளார், எங்கள் எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடன் உள்ளன" என தெரிவித்துள்ளார்.
அதேபோல் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு சிறப்பு அதிகாரிகள் ஆதரவு அளித்து வருவதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |